- Advertisement -
ஐ.பி.எல்

லக்னோவில் அவர் மாதிரி பஞ்சாப்காரர் வேலை செஞ்சா எப்படி ஜெய்க்க முடியும்.. வேற வழியும் இல்ல.. ஜஹீர் வேதனை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி லக்னோவை அதனுடைய சொந்த மண்ணில் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ வெறும் 171-7 ரன்கள் மட்டுமே எடுத்தது. முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரான் 44 ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக விளையாடிய பஞ்சாப்பை பிரப்சிம்ரன் சிங் 69, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 52* நேஹல் வதேரா 43* ரன்கள் அடித்து 16.2 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் பஞ்சாப் தங்களது இரண்டாவது வெற்றியைப் பெற்று அசத்தியது. மறுபுறம் லக்னோ தங்களது சொந்த மண்ணில் விளையாடிய முதல் போட்டியிலேயே தோற்று இரண்டாவது தோல்வியைப் பதிவு செய்தது.

- Advertisement -

பஞ்சாப்காரர் போட்ட பிட்ச்:

இந்நிலையில் இந்தப் போட்டி நடைபெற்ற லக்னோ மைதானத்தின் தயாரிப்பாளர் பிட்ச்சை தாங்கள் விரும்பியது போல் தயாரிக்கவில்லை என்று அந்த அணியின் ஆலோசகர் ஜஹீர் கான் தெரிவித்துள்ளார். மாறாக அதை ஒரு பஞ்சாப்காரர் தயாரித்தது போல் பிட்ச் இருந்ததால் எப்படி வெல்ல முடியும்? என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் தோல்விக்கு அதை சாக்கு சொல்லவில்லை என்றும் ஜஹீர் கான் கூறியுள்ளார்.

எனவே அடுத்தப் போட்டிகளில் பிட்ச் தயாரிப்பாளர் வழியில் சென்று அது பற்றிய விவரங்களைக் கேட்டு அதற்குத் தகுந்தார் போல் விளையாட உள்ளதாகவும் ஜஹீர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. பொதுவாக ஐபிஎல் அணிகள் தங்களது சொந்த ஊரில் இருக்கும் மைதானங்களை சாதகமாக எடுத்துக் கொள்கின்றன”

- Advertisement -

ஜஹீர் வேதனை:

“அந்தக் கோணத்தில் பார்க்கும் போது எங்களுடைய மைதானத்தின் தயாரிப்பாளர் சொந்த மண்ணில் விளையாடுகிறோம் என்பது போன்ற உணர்வை எங்களுக்குக் கொடுக்கவில்லை. சொல்லப்போனால் பஞ்சாப்பை சேர்ந்த தயாரிப்பாளர் இங்கே வேலை செய்தது போல் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். இதன் காரணமாக சொந்த மண்ணில் வெல்வோம் என்று எதிர்பார்த்த லக்னோ ரசிகர்களுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது”

இதையும் படிங்க: ஆஸியில் சொதப்பிய ரோஹித்.. இந்த ஒரு கண்டிஷனுக்கு ஓகேன்னா இங்கிலாந்தில் விளையாடலாம்.. மைக்கேல் கிளார்க்

“ஒரு அணியாக நாங்கள் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் இங்கே 6 போட்டிகள் இருக்கின்றன. அதில் சிறப்பாக விளையாடி வெல்வதற்கான மனநிலையை நாங்கள் கண்டறிவோம். மைதானத் தயாரிப்பாளர் எங்களிடம் என்ன சொல்கிறார் என்பதற்கு தகுந்தார் போல் விளையாடச் செல்வோம். இதை நாங்கள் சாக்காக சொல்லவில்லை. ஆனால் சொந்த மண்ணில் விளையாடும் அணிக்கு ஆதரவுகள் கிடைக்க வேண்டும். லக்னோவில் விளையாடும் நமது அணிக்கு எப்படி உதவி செய்யலாம்? என்று நீங்கள் பார்க்க வேண்டும். அனைவரது பங்களிப்பும் முக்கியம். எப்படி இருந்தாலும் நாங்கள் வெற்றிக் காணும் வழியைக் கண்டறிவோம்” என்று கூறினார்.

- Advertisement -