
தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இந்தியாவில் இந்த ஆண்டும் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக இடம் பெற்று விளையாடி இருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக 8.75 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த அவரது ஏலத்திற்கான மதிப்பு இம்முறை மேலும் அதிகரிக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் ஆல்ரவுண்டர் பிரிவில் இடம் பெற்ற வாஷிங்டன் சுந்தர் மீது பலரது எதிர்பார்ப்பும், கவனமும் இருந்தது.
ஆனால் இந்த ஏலத்தில் பெரிய அளவில் விலைபோவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் வெறும் 3 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியில் நிரந்தர இடத்திற்காக போராடி வந்த அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
அப்படி கம்பேக் கொடுத்த போட்டியிலேயே அசத்தலாக செயல்பட்ட அவர் தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்று கலக்கி வருகிறார். அதன்காரணமாக அவருக்கான ஏல மதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அவரை ஏலத்தில் எடுக்க குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மட்டுமே போட்டி போட்டன. அதன் முடிவில் குஜராத் அணி 3 கோடி 20 லட்சம் ரூபாய்க்கு அவரை வாங்கியது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் அஸ்வின் சென்னை அணியால் ஒன்பது கோடிக்கு மேல் வாங்கப்பட்ட வேளையில் நிச்சயம் சுந்தர் சுமார் எட்டு கோடி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க : இதுதான் ஜெய்ஸ்வாலின் மிகச்சிறப்பான இன்னிங்ஸ்ஸா எப்போதுமே இருக்கும். ஏன் தெரியுமா? – பும்ரா பாராட்டு
இவ்வேளையில் இவ்வளவு குறைவாக வாஷிங்டன் சுந்தர் குஜராத் அணிக்கு சென்றுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஐ.பி.எல் தொடரில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாதன் காரணமாகவே அவரது விலை சரிந்து இருக்கலாம் என்றும் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.