
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் பெங்களூருவுடன் விளையாட பஞ்சாப் தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஜூன் 1ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மும்பைக்கு அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 44, திலக் வர்மா 44, ஜானி பேர்ஸ்டோ 38, நமன் திர் 37 ரன்களை எடுத்தார்கள்.
அதனால் மும்பை 204 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய பஞ்சாப் 19 ஓவரிலேயே 207/5 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு மிடில் ஆடரில் அட்டகாசமாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 87* (41) ரன்களை எடுத்து சிறப்பான ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் ஜோஸ் இங்லிஷ் 38, நேஹல் வதேரா 48 ரன்களை எடுத்து கை கொடுத்தனர்.
மறுபுறம் அஸ்வனி குமார் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தும் மும்பை தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்நிலையில் குவாலிபயர் 1 போட்டியில் தோல்வியைச் சந்தித்த போது அதிகம் கவலைப்படாமல் தங்களுடைய திறமை மேலே நம்பிக்கை வைத்து சிறப்பாக விளையாடி இப்போட்டியில் வென்றுள்ளதாக பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியால் பெங்களூரு அணியை நோக்கி ஃபைனல் செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஃபைனலில் வெல்லும் வரை தங்களுடைய வேலை முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பேட்டிங் செய்கையில் எப்படி அமைதியாக இருந்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை. அது போன்ற தருணங்களை நான் விரும்புகிறேன். அழுத்தமான பெரிய தருணங்களில் நீங்கள் அமைதியாக இருந்தால் உங்களுக்கு பெரிய நல்ல முடிவுகள் கிடைக்கும் என்று எப்போதும் என்னுடைய சக வீரர்களிடம் தெரிவிப்பேன்”
“அதற்கு இன்று சிறந்த எடுத்துக்காட்டு. வெளியே இருக்கும் சத்தம், வியர்வை மீது கவனம் செலுத்தாத நான் என்னுடைய மூச்சில் கவனம் செலுத்தினேன். 200+ ரன்களை துரத்துவதற்கு அனைத்து வீரர்களும் முதல் பந்தில் இருந்தே ஆர்வத்தைக் காட்ட வேண்டும் என்று போட்டியின் ஆரம்பத்திலேயே சொன்னேன். எங்களுடைய துவக்க வீரர்கள் பெரிய ரன்கள் குவிக்கா விட்டாலும் நல்ல அதிரடியைக் கொடுத்தார்கள்”
இதையும் படிங்க: 200 ரன்ஸ் அடித்து பும்ரா இருந்தும் முதல் முறையா பஞ்சாப்பிடம் தோற்க இதான் காரணம்.. பாண்டியா வருத்தம்
“நான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டேன். மறுபுறம் எங்களுடைய பேட்ஸ்மேன் சிறப்பாக அடித்தார்கள். களத்தில் அதிக நேரத்தை செலவிட்டால் எனக்கு சிறந்த தொலைநோக்கு பார்வை கிடைக்கும் என்பது தெரியும். ஆர்சிபி அணியிடம் தோற்ற பின் எதைப் பற்றியும் நாங்கள் அதிகம் சிந்திக்கவில்லை. ஏனெனில் இத்தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். எங்களிடம் முதல் போட்டியில் இருந்தே அதிரடியாக விளையாடும் நோக்கம் இருந்ததால் ஒரு தோல்வி எதையும் தீர்மானிக்காது. எங்களுடைய வேலை இன்னும் முடியவில்லை. ஃபைனல் பற்றியும் அதிகம் சிந்திக்கவில்லை” என்று கூறினார்.