ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 2 போட்டியில் மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஜூன் 1ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 20 ஓவரில் போராடி 203/6 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 44, திலக் வர்மா 44, ஜானி பேர்ஸ்டோ 38, நமன் திர் 37 ரன்களை எடுத்தார்கள்.
பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக ஓமர்சாய் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய பஞ்சாப்புக்கு மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 87* (41) ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் ஜோஸ் இங்லிஷ் 38, நேஹல் வதேரா 48 ரன்களை அடித்ததால் 19 ஓவரிலேயே 207/5 ரன்கள் எடுத்த பஞ்சாப் 11 வருடங்கள் கழித்து ஃபைனலில் விளையாட தகுதி பெற்றது.
வெளியேறிய மும்பை:
மறுபுறம் மும்பைக்கு அதிகபட்சமாக அஸ்வனி குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போட்டியில் 200 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் பரிதாபத் தோல்வியை சந்தித்த மும்பை 6வது கோப்பையை வெல்ல முடியாமல் தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில் இப்போட்டியில் தாங்கள் சரியான லென்த்தில் பந்து வீசாதது தோல்வியை கொடுத்ததாக மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று ஜஸ்ப்ரித் பும்ராவால் விக்கெட் எடுக்க முடியாமல் போனதும் தோல்விக்கு காரணமானதாக தெரிவிக்கும் அவர் ஸ்ரேயாஸ் ஐயர் அழுத்தத்தின் கீழ் அபாரமாக விளையாடி வென்றதாக பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் பேட்டிங் செய்த விதம், ரிஸ்க் எடுத்து ஷாட்டுகளை அடித்த விதம் அற்புதமாக இருந்தது. பஞ்சாப் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்று நினைக்கிறேன்”
பாண்டியா பாராட்டு:
“நாங்கள் நிர்ணயித்த இலக்கு போதுமானது. ஆனால் இது போன்ற போட்டிகளை வெல்ல உங்களுடைய பௌலிங் துறை சிறப்பாக செயல்படுவது அவசியம். ஏற்கனவே சொன்னது போல பஞ்சாப் அமைதியாக செயல்பட்டு எங்களை அழுத்தத்திற்குள் தள்ளினார்கள். அதனால் நாங்கள் விரும்பியதை எங்களால் செயல்படுத்த முடியவில்லை. பிட்ச் மேலே எந்த குறையையும் போட மாட்டேன்”
இதையும் படிங்க: மும்பையின் 6வது கோப்பையை உடைத்த பஞ்சாப்.. வரலாறு காணாத சாதனை வெற்றியுடன் ஃபைனலுக்கு தகுதி
“சரியான லென்த்தில் பவுலிங் செய்வது அல்லது சரியான நேரத்தில் சரியான பவுலரை பயன்படுத்துவது போன்றவற்றை நாங்கள் செய்திருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். 4 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்ட சூழ்நிலையில் பும்ரா பவுலிங் செய்ய வைத்திருக்கலாம் என்பது அதிகப்படியான சிந்தனையாகும். ஏனெனில் 18 பந்துகள் மட்டுமே மீதம் இருக்கிறது என்றாலும் பும்ரா பும்ராவை போல செயல்பட்டு ஏதேனும் ஸ்பெஷல் மேஜிக்கை நிகழ்த்துவார். ஆனால் அது இன்று நடக்கவில்லை” என்று கூறினார்.



