ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் முக்கியமான குவாலிஃபயர் 2 போட்டி ஜூன் ஒன்றாம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்றது. மழையால் இரவு 9.40 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் சர்மா 8 ரன்னில் நடையைக் கட்டினார்.
மறுபுறம் அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோ 38 (24) ரன்கள் விளாசி விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த சூரியகுமார் தம்முடைய பங்கிற்கு வேகமாக ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய திலக் வர்மா 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பையை வலுப்படுத்தினார். அந்த ஜோடியில் இருவருமே தலா 44 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்கள்.
பஞ்சாப் அசத்தல்:
மிடில் ஆர்டரில் கேப்டன் ஹர்திக் பாண்டியா தடுமாறி 15 (13) ரன்னில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் நமன் திர் 37 (18) ராஜ் பாவா 8* (4) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் மும்பை 203/6 ரன்களை எடுத்தது. பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக ஓமர்சாய் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்து விளையாடிய பஞ்சாப்புக்கு ப்ரப்சிம்ரன் சிங் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
மறுபுறம் அடித்து நொறுக்க முயற்சித்த பிரியான்ஸ் ஆர்யா 20 (10) ரன்னில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். அவருடன் எதிர்ப்புறம் ஜோடி சேர்ந்த ஜோஸ் இங்லிஷ் 38 (21) ரன்கள் விளாசி அசத்தினார். அவருக்கு அடுத்ததாக வந்த நேஹல் வதேரா தனது கேப்டனுடன் 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 48 (29) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
பஞ்சாப் வெற்றி:
ஆனால் இந்தப் பக்கம் கடைசி வரை அவுட்டாகாமல் பட்டாசான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 27 பந்தில் அரை சதத்தை அடித்து 87* (41) ரன்களை விளாசி மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 19 ஓவரிலேயே 207/5 ரன்களை எடுத்த பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து பஞ்சாப் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
அதை விட ஐபிஎல் வரலாற்றில் ஒரு பிளே ஆஃப் போட்டியில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற சாதனையையும் பஞ்சாப் படைத்துள்ளது. மேலும் மும்பைக்கு எதிராக ஐபிஎல் தொடரில் 200+ இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற வரலாற்றில் வேறு எந்த அணியும் செய்யாத சாதனையை பஞ்சாப் படைத்துள்ளது. மறுபுறம் மும்பைக்கு அதிகபட்சமாக அஸ்வனி குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இதையும் படிங்க: விராட் கோலியின் கிரேட் லீகசியை அவங்க பாத்துக்குவாங்க.. இந்தியா கவலைப்பட வேண்டாம்.. ஏபிடி பேட்டி
அத்துடன் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக மும்பை 200 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் வரலாறு காணாத தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அதனால் அந்த அணியின் 6வது கோப்பை கனவு நொறுங்கியுள்ளது என்றே சொல்லலாம். அதை செய்த பஞ்சாப் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ளத் தகுதி பெற்றது.



