மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹார்டிக் பாண்டியா கடந்த இரண்டு சீசன்களாகவே கேப்டனாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 14 போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 10 தோல்விகளை பெற்று புள்ளி பட்டியல் ஒன்பதாம் இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக கேப்டன் ஹார்டிக் பாண்டியாவின் மீது மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஹார்டிக் பாண்டியா செல்லப்போகும் புதிய அணி :
அதனால் 2027 ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக அவர் நீக்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி நிர்வாகம் முடிவதற்கு முன்னதாகவே தானாக முன்வந்து ஹார்திக் பாண்டியா இடமாற்றம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஹார்டிக் பாண்டியா ராஜஸ்தான் அணிக்கு செல்வார் என்றும் அங்கிருந்து ஜெய்ஸ்வால் மும்பை அணிக்கு செல்வார் என்ற தகவல்கள் பேசப்பட்டு வந்தன.
அதேபோன்று கொல்கத்தா அணியும் ஹார்டிக் பாண்டியாவை டிரேடிங் செய்ய அதிக ஆர்வம் காட்டும் என்றும் கூறப்பட்டது. ஏனெனில் அஜின்க்யா ரஹானே கேப்டனாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் அந்த அணிக்கு புதிய கேப்டன் வேண்டும் என்பதினால் ஹார்திக் பாண்டியாவை கே.கே.ஆர் அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் இவ்விரு அணிகளையும் தாண்டி ஹார்டிக் பாண்டியா சி.எஸ்.கே அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் சி.எஸ்.கே அணி ஒரு பலமான ஆல்ரவுண்டரை தேர்வு செய்ய முயற்சிக்கும் என்பதனால் தோனியுடன் நெருக்கத்தில் இருக்கும் ஹார்டிக் பாண்டியாவை தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷி இந்திய டி20 அணியில் அறிமுகமாவதில் என்னதான் பிரச்சனை? – விவரம் இதோ
அதேபோன்று சி.எஸ்.கே அணி நிர்வாகமும் ஹார்டிக் பாண்டியாவை தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டுவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அப்படி ஒருவேளை ஹார்டிக் பாண்டியா சென்னை அணிக்கு வந்தால் நிச்சயம் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷிவம் துபேவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விட்டுக் கொடுக்கவும் விருப்பம் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.



