இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் சச்சின் டெண்டுல்கருக்கு பின் சிறப்பாக விளையாடி இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டார். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர் 123 போட்டிகளில் 9230 ரன்களை எடுத்துள்ளார்.
2014இல் தோனி விடை பெற்ற போது ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா 7வது இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தன்னுடைய ஆக்ரோஷமான அணுகுமுறையால் 2016 – 2021 வரை இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் அவரது தலைமையில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது.
விடைபெற்ற கோலி:
இருப்பினும் சமீபத்திய வருடங்களாக தடுமாறி வந்த விராட் கோலி 36 வயதில் ரோஹித் சர்மாவை தொடர்ந்து வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் விடை பெறுவதற்கு இதுவே சரியான நேரம் என்று கருதி விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளதாக ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் விராட் கோலியின் மரபை (லீகசி) முன்னோக்கி எடுத்துச் செல்ல இந்தியாவில் நிறைய தரமான இளம் வீரர்கள் இருப்பதாகவும் அவர்
கூறியுள்ளார்.
எனவே விராட் கோலியின் ஓய்வு குறித்து இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி தம்முடைய தைரியமான உணர்வை பின்பற்றியுள்ளார். கடந்த பல வருடங்களாக அவர் உலக கிரிக்கெட்டுக்கு நிறைய பங்காற்றியுள்ளார். அதிர்ஷ்டவசமாக நாம் இன்னும் அவரை களத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்”
ஏபிடி பாராட்டு:
“இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை நாம் மிஸ் என்பதில் சந்தேகமில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கிரேட் லீகசியை விட்டுச் சென்றுள்ளார். ஆம் இது இளம் வீரர்கள் வருவதற்கான நேரமாகும். சுப்மன் கில் பொறுப்பை எடுத்துக்கொள்ள உள்ளார். இளம் வயதிலேயே வாய்ப்பையும் வெளிப்படுத்தலையும் கொடுக்கும் ஐபிஎல் காரணமாக இந்தியாவில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க: ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடணும்னா இதை பண்ணனும் – மான்டி பனேசர் கருத்து
“இந்த வருடம் சூரியவன்சி அசத்தியதைப் பார்த்தோம். அவரைப் போல நிறைய வீரர்கள் ஆரம்பத்திலேயே முதிர்ச்சியுடன் கிரிக்கெட்டில் விளையாட தயாராக இருக்கிறார்கள். அது இந்தியாவுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாகும். தற்போது இளம் இந்திய அணியினர் இங்கிலாந்தில் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அது கடினமானதாக இருக்கும். ஆனால் இந்தியாவிடம் உலகத்தரமான வீரர்கள் இருக்கிறார்கள். எனவே தங்களை நம்பி விளையாடினால் அவர்களால் ஏதாவது ஸ்பெஷலாக சாதிக்க முடியும்” என்று கூறினார்.



