ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையில் தடுமாற்றமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. இருப்பினும் அந்த அணிக்கு இந்த வருடம் திக்வேஷ் ரதி எனும் இளம் வீரர் கிடைத்தது ஆறுதலாக அமைந்தது. டெல்லியைச் சேர்ந்த அவர் லக்னோ அணிக்காக அதிக (14) விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டார்.
அதை விட விக்கெட் எடுக்கும் போதெல்லாம் நோட் புக்கில் எழுதுவது போல அவர் கொண்டாடியது வைரலானது. அதற்காக முதல் முறை 25% போட்டி சம்பளம் அபராதம் கட்டிய அவர் 2வது முறை 50% போட்டி சம்பளத்தை அபராதமாக செலுத்தினார். அப்போதும் அமைதியாக அவர் ஹைதராபாத்துக்கு எதிராக அபிஷேக் சர்மா விக்கெட்டை எடுத்த பின் மீண்டும் நோட்புக்கில் எழுதுவது போல கொண்டாடினார்.
5 பந்தில் 5 விக்கெட்:
அத்துடன் அபிஷேக் ஷர்மாவுடன் வாக்குவாதம் செய்து சண்டை போட்டதால் அவருக்கு 50% போட்டி சம்பளத்தை அபராதமாக விதித்த பிசிசிஐ ஒரு போட்டியில் விளையாட தடை செய்தது. இந்நிலையில் ஐபிஎல் முடிந்த பின் திக்வேஷ் உள்ளூரில் நடைபெறும் ஒரு டி20 தொடரில் விளையாடி வருகிறார். அந்தப் போட்டியில் 268 ரன்களை துரத்திய ஏஆர் எனும் அணி 15 ஓவரில் 151/5 ஸ்கோருடன் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது 15வது ஓவரை வீசிய திக்வேஷ் முதல் பந்தில் அங்கித் டன்ங்கரை 1 ரன்னில் போல்ட்டாக்கினார். அடுத்து வந்த ராஜ் பாண்டேவையும் கிளீன் போல்ட்டாக்கிய அவர் அதற்கடுத்ததாக வந்த நிர்பய் தகரையும் கோல்டன் டக் அவுட்டாக்கினர். அதனால் 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள் எடுத்த அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து மாஸ் காட்டினார்.
லக்னோ ஓனர் பாராட்டு:
அதோடு நிற்காத திக்வேஷ் 4, 5வது பந்துகளில் ஆதித்யா ராணா, லக்ஷ்மன் என அடுத்து வந்த 2 பேட்ஸ்மேன்களையும் அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்டாக்கினார். அந்த வகையில் 5 பந்துகளில் 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் எதிரணியை 151/5 என்ற நிலையிலிருந்து ஆல் அவுட் செய்து தம்முடைய அணியை 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அந்தப் போட்டியில் மொத்தமாக அவர் 28 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையும் படிங்க: மனசை விட்டுறாதீங்க.. கருண் நாயருக்கு நடந்த மாதிரி உங்களுக்கும் நடக்கும்.. சர்பராஸ் கானுக்கு – ஹர்பஜன் ஆறுதல்
அதைப் பார்த்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ட்விட்டரில். “உள்ளூர் டி20 போட்டியில் திக்வேஷ் 5 பந்துகளில் 5 விக்கெட் எடுத்ததைப் பார்த்து தடுமாறி விட்டேன். 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பிரேக் அவுட் ஸ்டாராக மாறிய அவருடைய திறமைக்கு இது ஒரு சிறிய பார்வையாகும்” என்று வீடியோவுடன் சேர்த்து பதிவிட்டு வியப்புடன் பாராட்டியுள்ளார்.



