இந்திய கிரிக்கெட் அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சர்பராஸ் கான் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது அறிமுகமாகி முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி இந்திய அணிக்காக இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் 3 அரைசதம் என 371 ரன்கள் குவித்துள்ளார்.
சர்பராஸ் கானுக்கு ஆறுதல் கூறிய : ஹர்பஜன் சிங்
இதனால் நீண்ட காலமாகவே இந்திய டெஸ்ட் அணியின் வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் போது அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தாலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் கிரிக்கெட்டில் மலைபோல் ரன்களை குவித்து இருந்தும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான பேட்டிங் திறன்கள் இருந்தும் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணயிலும் இடம்பிடித்துள்ள அவர் முதன்மை இந்திய அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார். அப்படி இருந்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் :
இந்திய அணியில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டது உண்மையிலேயே ஒரு ஏமாற்றமான விடயம் தான். ஆனாலும் நீங்கள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் கம்பேக் கொடுப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். நிச்சயம் உங்களுக்கான நாள் வரும் போது உங்களால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும். கருண் நாயரை பாருங்கள் அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 300 ரன்களை குவித்தார்.
இதையும் படிங்க : அமெரிக்க டி20: 60க்கு ஆல் அவுட்.. சீட்டில் அணியை தெறிக்க விட்ட டிஎஸ்கே.. 2வது லோ ஸ்கோர் சாதனை வெற்றி
அதன்பிறகு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனாலும் தற்போது நீண்ட ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். அதேபோன்று உங்களாலும் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முடியும் என ஹர்பஜன் சிங் ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.



