
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 17 வருடங்களாக கோப்பையை வெல்லாமல் இருந்த வரலாற்றை மாற்றி எழுதிய ஆர்சிபி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தது. ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 191 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 43, மயங் அகர்வால் 24, கேப்டன் படிதார் 26, லிவிங்ஸ்டன் 25, ஜிதேஷ் சர்மா 24 ரன்களை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய பஞ்சாப்புக்கு பிரப்சிம்ரன் சிங் 26, பிரியான்ஸ் ஆர்யா 24, ஜோஸ் இங்லிஷ் 39, சசாங் சிங் 61* ரன்கள் எடுத்துப் போராடினர். ஆனாலும் 20 ஓவரில் 184/7 ரன்களை மட்டுமே எடுத்தால் பஞ்சாப் முதல் கோப்பையை கோட்டை விட்டது.
பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் முதல் கோப்பையை வென்ற ஆர்சிபி வீரர்கள் வெறித்தனமாக வெற்றியைக் கொண்டாடினர். குறிப்பாக 17 வருடங்களாக போராடி வெற்றி பெற்றதால் விராட் கோலி களத்திலேயே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கினார்.
மேலும் ஏபி டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல் ஆகியோருடன் சேர்ந்து அவர் வெற்றியைக் கொண்டாடினார். அதே போல ஆர்சிபி ரசிகர்களும் மைதானத்திலும் சமூக வலைதளங்களிலும் சொந்த ஊர்களிலும் 17 வருடங்களுக்கும் சேர்த்து மொத்தமாக வெற்றியை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். இந்நிலையில் முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் 18வது ஐபிஎல் தொடரில் 18வது ஜெர்சியை அணிந்து விளையாடும் விராட் கோலி முதல் கோப்பையை வென்றது பொருத்தமாக இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி தம்முடைய டுவிட்டர் பக்கத்தில் சச்சின் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஆர்சிபி அணி முதல் கோப்பையை வென்றதற்காக வாழ்த்துக்கள்”
இதையும் படிங்க: பஞ்சாப்பை சாய்க்க இதான் காரணம்.. முதல் நாளில் ஆர்சிபி’யிடம் சொன்னதை செஞ்சுட்டேன்.. க்ருனால் பேட்டி
“18 ஐபிஎல் தொடரில் 18வது ஜெர்சி நம்பர் கோப்பையைத் தூக்குவது பொருத்தமானதாக இருக்கிறது. சிறப்பாக விளையாடினீர்கள். இதற்கு நீங்கள் தகுதியானவர்கள். பஞ்சாப் அணியும் நன்றாக விளையாடியது. இந்தத் தொடர் முழுவதும் அவர்கள் மிகச் சிறப்பாக போராடினார்கள்” என்று பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் விராட் கோலி கோப்பையை வென்றது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.