ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 17 வருட சோகத்தை உடைத்த அந்த அணி முதல் முறையாக கோப்பையை வென்ற சாதனைப் படைத்தது. ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 191 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 43, மயங் அகர்வால் 24, கேப்டன் படிதார் 26, லிவிங்ஸ்டன் 25, ஜிதேஷ் சர்மா 24 ரன்களை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய பஞ்சாப்புக்கு பிரப்சிம்ரன் சிங் 26, பிரியான்ஸ் ஆர்யா 24, ஜோஸ் இங்லிஷ் 39 ரன்கள் எடுத்துப் போராடினர். மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
ஆட்டநாயகன் க்ருனால்:
இறுதியில் சசாங் சிங் 61* (30) ரன்கள் அடித்தும் 20 ஓவரில் 184/7 ரன்களை மட்டுமே எடுத்த பஞ்சாப் பரிதாபமாக தோற்றது. பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார், க்ருனால் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்நிலையில் தங்களுடைய வீட்டுக்கு 9வது ஐபிஎல் கோப்பை வருவதாக தம்முடைய சகோதரர் ஹர்திக் பாண்டியாவிடம் சொன்னதாக ஆட்டநாயகன் விருது வென்ற க்ருனால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் போட்டியில் பஞ்சாப்பை சாய்ப்பதற்கு பின்பற்றிய திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த எங்களுடைய பேட்ஸ்மேன்களிடம் பேசிய போது ஸ்லோயர் பந்துகள் தாக்கத்தை ஏற்படுத்துவதை புரிந்து கொண்டேன். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் நீங்கள் அதை செய்ய தைரியமாக இருக்க வேண்டும். ஏனெனில் இங்கே தவறு செய்வதற்கான விளிம்பு குறைவு”
9வது கோப்பை வருது:
“எனக்கு நானே ஆதரவு கொடுத்து என்னுடைய வேகத்தை அளந்து வீசினால் ஸ்லோயர் பந்துகளை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைத்தேன். தேவைப்படும் சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்வதே என்னுடைய பெரிய பலமாகும். அதற்காக எப்போதும் என்னுடைய உள்ளுணர்வுகள் மற்றும் தைரியத்தை ஆதரவளிக்கிறேன். சில விக்கெட்டுகளை எடுக்க வேண்டுமெனில் அதற்கு நான் தைரியமாக இருக்க வேண்டும் என்பதை இன்று உணர்ந்தேன்”
இதையும் படிங்க: பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐ.பி.எல் கோப்பையை ஜெயிக்க இவரே முக்கிய காரணம் – ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி
“இந்த பிட்ச்சில் வேகமாக பந்து வீசினால் அது எதிரணிக்கு சாதகமாகி விடும். அதே சமயம் வேகத்தை மாற்றி வீசினால் உங்களுக்கு கொஞ்சம் உதவி கிடைக்கும். 2வது இன்னிங்ஸில் பிட்ச் பேட்டிங் செய்ய நன்றாகவே இருந்தது. ஆர்சிபி அணியுடன் இணைந்த போது நான் கோப்பை வெல்வதை விரும்புவதாக அவர்களிடம் சொன்னேன். முதல் நாளில் ஆர்சிபி அணியிடம் சொன்னதை மூன்றரை மாதங்கள் கழித்து நிறைவேற்றியதில் மகிழ்ச்சி. 10 வருடங்களில் 4 கோப்பைகளை வென்றுள்ளேன். பாண்டியாவின் வீட்டுக்கு 10 வருடங்களில் 9வது கோப்பை வருவதாக ஹர்டிக்கிடம் சொன்னேன்” எனக் கூறினார்.



