
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள். எனவே ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி விடை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் 2027ஆம் ஆண்டு 38, 40 வயதில் அவர்களால் நல்ல ஃபிட்னஸ் மற்றும் ஃபார்மில் அசத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகும். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களை கழற்றி விட்ட பிசிசிஐ சுப்மன் கில் தலைமையிலான இளம் அணியை உருவாக்கி இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரை சமன் செய்து அசத்தியது. அதே போல 2027 உலகக் கோப்பையிலும் இளம் அணியை பிசிசிஐ களமிறக்க விரும்புகிறது.
அதற்காக வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட், ரோஹித்தை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மறுபுறம் அதுவே அவர்களுடைய கடைசித் தொடராக இருக்கும் பட்சத்தில், தங்களுடைய நாட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு சிறப்பான ஃபேர்வெல் கொடுப்போம் என்று ஆஸ்திரேலிய வாரியம் கடந்த மாதம் அறிவித்தது.
இந்நிலையில் அக்டோபர் மாதம் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருடன் விராட் ரோஹித்தை கழற்றி விடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுற்றுலா தெளிவுபடுத்தியுள்ளார். எந்த இந்திய வீரரையும் வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைக்கும் கொள்கையும் தங்களிடம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அவர்கள் எப்போது ஓய்வு பெற்றார்கள். விராட், ரோஹித் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்கள். எனவே விளையாடிக் கொண்டிருக்கும் அவர்களுடைய ஃபேர்வெல் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஆம் அவர்கள் மற்ற 2 ஃபார்மெட்டில் ஓய்வு பெற்று விட்டார்கள். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள் அல்லவா? அதன் மேலே எதையும் அதிகமாக பூசாதீர்கள்”
இதையும் படிங்க: நாங்க ரொம்ப ட்ரை பண்ணோம்.. ஆனா முகமது சிராஜை வாங்கமுடியாம போக இதுவே காரணம் – ஆர்.சி.பி வெளியிட்ட தகவல்
“பிசிசிஐயில் எங்களுடைய கொள்கை தெளிவாக இருக்கிறது. நாங்கள் எந்த வீரரையும் ஓய்வு பெறுமாறு சொல்ல மாட்டோம். வீரர்கள் தங்களது சொந்த முடிவை எடுக்கிறார்கள். அவர்கள் முடிவெடுத்தால் அதை நாங்கள் மதிக்கிறோம். விராட் மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். ரோஹித் சர்மா நன்றாக விளையாடுகிறார். எனவே அவர்களுடைய ஃபேர்வெல் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?” என்று கூறினார்.