RR vs PBKS : 10 வருடங்கள் கழித்து ராஜஸ்தான் எடுத்த தேவையற்ற முடிவு, நூலிழையில் போராட்ட வெற்றி பறிபோனது எப்படி?

PBKS vs RR
- Advertisement -

கோலகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 5ஆம் தேதியன்று நடைபெற்ற 8வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. கௌகாத்தி நகரில் இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே சரவெடியாக செயல்பட்டு 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டிய ப்ரப்சிம்ரன் சிங் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 60 (34) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் நிதானத்தை காட்டிய கேப்டன் ஷிகர் தவான் அடித்த ஒரு பந்து அடுத்து வந்த பனுக்கா ராஜபக்சா மீது பட்டதால் 1 ரன்னில் காயமடைந்து பாதியிலேயே வெளியேறினார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த ஜித்தேஷ் சர்மா 2 பவுண்டரி 1 சிக்ருடன் 27 (16) ரன்கள் குவித்து ஆட்டமிழந்து செல்ல பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிக்கந்தர் ராசா அடுத்ததாக களமிறங்கி 1 (2) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் ஷாருக்கான் 11 (10) ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் பொறுமையாக விளையாடிய ஷிகர் தவான் கடைசி நேரத்தில் சற்று அதிரடியாக விளையாடி 9 பவுண்டரி 3 சிக்சருடன் 86* (56) ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவர்களில் பஞ்சாப் 197/4 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

தேவையற்ற முடிவா:
அதை தொடர்ந்து 198 என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு யாருமே எதிர்பாராத வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்கியது ஆச்சரியமாக அமைந்தது. குறிப்பாக கடைசியாக கடந்த 2013இல் சென்னை அணிக்காக மைக் ஹசியுடன் தொடக்க வீரராக ஒரு போட்டியில் களமிறங்கியிருந்த அவர் 10 வருடங்கள் கழித்து இந்த போட்டியில் மீண்டும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் மறுபுறம் அதிரடியை துவக்க முயற்சித்த ஜெய்ஸ்வாலை 11 (8) ரன்னில் அவுட்டாக்கிய அர்ஷிதீப் சிங் அடுத்த ஓவரில் அஸ்வினையும் டக் அவுட்டாக்கினார்.

அதனால் 26/2 என தடுமாறிய ராஜஸ்தானுக்கு அடுத்த களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 19 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற மறுபுறம் அதிரடி காட்டிய கேப்டன் சஞ்சு சம்சானும் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 42 (25) ரன்கள் குவித்து 11வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் மிடில் ஓவர்களில் தடுமாறிய ராஜஸ்தானை அதிரடியாக விளையாட முயற்சித்து காப்பாற்ற முயன்ற ரியான் பராக்கை 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 20 (12) ரன்களில் அவுட்டாக்கிய நாதன் எலிஸ் மறுபுறம் தடவலாக செயல்பட்ட தேவதூத் படிக்கலையும் 21 (26) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அதன் காரணமாக 124/6 என தடுமாறிய ராஜஸ்தானுக்கு கடைசி 5 ஓவரில் வெற்றி பெற 74 ரன்கள் தேவைப்பட்ட போது சிம்ரோன் ஹெட்மையர் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் டெத் ஓவர்களில் அதிரடியாக ரன்களை குவித்து போராடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அதனால் சாம் கரண் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் ஜுரேல் சிங்கிள் எடுக்க 2வது பந்தில் டபுள் எடுத்த ஹெட்மேயர் 3வது பந்திலும் டபுள் எடுக்க முயற்சித்து 1 பவுண்டரி 3 சிக்சருடன் 36 (18) ரன்களில் ரன் அவுட்டானது பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இறுதியில் துருவ் ஜுரேல் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 32* (15) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் 192/7 ரன்கள் மட்டுமே எடுத்த ராஜஸ்தான் போராடி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக நாதன் எலிஸ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். முன்னதாக இந்த போட்டியில் ஓப்பனிங் ஜோடியை பிரித்து தேவையின்றி 10 வருடங்கள் கழித்து அஷ்வினை தொடக்க வீரராக களமிறக்கிய ராஜஸ்தானின் முடிவு தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இதையும் படிங்க: பணத்தை வெச்சு திறமையையும் நேர்மையையும் வாங்க முடியாது – இந்தியாவை எச்சரிக்கும் மொய்ன் கான், காரணம் என்ன

ஏனெனில் கடந்த போட்டியில் பவர் பிளே ஓவர்களிலேயே 84 ரன்கள் குவித்து ஜெய்ஸ்வால் – பட்லர் ஆகியோர் மிரட்டலான தொடக்கம் கொடுத்தது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் இன்றைய போட்டியில் வழக்கத்திற்கு மாறாக பட்லர் 3வது இடத்தில் களமிறங்கி சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்றார். ஒருவேளை இன்றைய போட்டியிலும் அந்த ஜோடி அதே போல் பவர் பிளே ஓவர்களில் ஒரு எக்ஸ்ட்ரா சிக்சர் அடித்திருந்தால் கூட தோல்வி கிடைத்திருக்காது எனலாம். இடையே படிக்கல் தடவியதும் தோல்விக்கு மற்றொரு காரணமாகும்.

Advertisement