ஜஹீர் கான், நெஹ்ரா மாதிரி இவரும் வருவாரு – இந்தியாவுக்கு தேர்வான இளம் பவுலரை பாராட்டும் சேவாக்

sehwag
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆரம்பம் முதலே நிறைய இளம் வீரர்கள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கவர்ந்தனர். அதன் காரணமாக ஒரு சில வீரர்கள் ஐபிஎல் முடிந்ததும் சொந்த மண்ணில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியில் முதல் முறையாக வாய்ப்பையும் பெற்று அசத்தியுள்ளனர். அதில் வேகப்பந்து வீச்சாளர்களான உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதில் உம்ரான் மாலிக் வேகத்தால் தேர்வு குழுவினரை கவர்ந்தார் என்றால் பஞ்சாப் அணிக்காக கடந்த சில வருடங்களாகவே விளையாடி வரும் அர்ஷிதீப் சிங் இந்த வருடம் தனது விவேகத்தால் தேர்வு குழுவினரை எந்தவித யோசனையுமின்றி இந்தியாவிற்கு தேர்வு செய்ய வைத்துள்ளார். கடந்த 2018 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வெறும் பேக் அப் வீரராக பெஞ்சில் அமர்ந்து வந்த இவர் உள்ளூர் போட்டிகளில் அசத்தியதால் 2019இல் முதல் முறையாக வெறும் 20 லட்சத்துக்கு பஞ்சாப் அணி வளைத்துப் போட்டது.

விவேகமான அர்ஷ்தீப்:
அந்த முதல் வருடத்தில் 3 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை 10.90 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் 2020இல் 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை 8.77 என்ற எக்கனாமியில் எடுத்து கடந்த வருடம் 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 8.27 என்ற எக்கனாமியில் எடுத்து ஒவ்வொரு வருடமும் முன்னேற்றத்தை கண்டு வந்தார். அதன் காரணமாக முகமது சமி போன்ற வீரர்களை கூட தக்கவைக்க பஞ்சாப் அணி நிர்வாகம் இவரை 4 கோடி என்ற பெரிய தொகைக்கு தக்க வைத்தது. அந்த வகையில் இந்த வருடம் 14 போட்டிகளில் பங்கேற்ற அவர் 10 விக்கெட்களை 7.70 என்ற முன்பைவிட அசத்தலான துல்லியமான எக்கனாமியில் எடுத்து உச்சகட்ட முன்னேற்றத்தை அடைந்தது தான் அனைவரையும் வியக்க வைத்தது.

மேலும் பொதுவாக பேட்ஸ்மேன்கள் சிக்சர்களை அடிப்பதற்காக துடிக்கும் கடைசி கட்ட 16 – 20 ஓவர்களில் நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ராவுக்கு (7.66) பின் 7.95 சிறப்பான எக்கனாமியில் பந்து வீசியுள்ள அவர் இந்த 14 போட்டிகளில் அந்தக் கடைசி கட்ட ஓவரில் வெறும் 1 சிக்சர் மட்டுமே எதிரணிக்கு வழங்கியுள்ளார். அதேபோல் கடைசி கட்ட ஓவர்களில் 34 யார்கர்களை வீசிய அவர் நடராஜன் (28), புவனேஸ்வர் குமார் (25) ஆகியோரையும் மிஞ்சியுள்ளார். மொத்தத்தில் வேகத்தைவிட விவேகம் தான் சிறந்தது என்பதை அர்ஷிதீப் சிங் நிரூபித்து அந்தத் திறமையால் இந்திய அணியிலும் இடத்தை பிடித்து சாதித்துக் காட்டியுள்ளார்.

- Advertisement -

ஜஹீர் கான் மாதிரி:
இந்நிலையில் அசுர வேகம் இல்லாத போதிலும் முன்னாள் இந்திய நட்சத்திரங்கள் ஜாஹீர் கான், ஆஷிஸ் நெஹ்ரா போன்றவர்களை போல விவேகமும் துல்லியமும் நிறைந்தவர் என்று அர்ஷிதீப் சிங்கை முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். இது பற்றி இந்தியாவிற்கு முதல் முறையாக அவர் தேர்வான பின்பு பேசியது பின்வருமாறு. “அர்ஷிதீப் என்னை மிகவும் இம்ப்ரஸ் செய்துள்ளார். ஏனெனில் பஞ்சாப் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் கடைசி 3 ஓவர்களில் அவர் 2 ஓவர்கள் வீசுகிறார். அவர் நிறைய விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் அவரின் எகனாமி ரேட் மிகச் சிறப்பாக உள்ளது”

sehwag

“அவர் புதிய பந்தில் பவர் பிளே ஓவரில் ஒரு ஓவரும் கடைசி கட்ட ஓவரில் 2 – 3 ஓவர்களும் வீசும் திறமை பெற்றுள்ளார். என்னுடைய காலத்தில் ஜாஹிர் கான் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் மட்டுமே அது போன்றவற்றை செய்பவர்களாக பார்த்தேன். தற்போது புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருடன் அர்ஷ்தீப் சிங் இணைந்துள்ளார். கடைசி கட்ட ஓவர்களில் பந்து வீசுவது மிகவும் கடினமான வேலையாகும்” என்று கூறினார்.

- Advertisement -

வேகம் என்பது அனைத்து நேரங்களிலும் கை கொடுக்காது என்பதுடன் காயத்தையும் ஏற்படுத்தவல்லது என்ற சூழ்நிலையில் வேகத்தை விட அதிகமான விவேகம் தான் நீண்ட நாட்கள் மிகச் சிறப்பாக விளையாட உதவும் என்று வல்லுநர்கள் கூறுவார்கள்.

இதையும் படிங்க : ஐபிஎல் விட எங்களின் இந்த தொடர் தான் சிறந்த தொடர் – இங்கிலாந்து முன்னாள் வீரர் கருத்து

அந்த வகையில் 130 – 140+ கி.மீ என்ற சீரான வேகத்தில் மட்டுமே வீசினாலும் முன்னாள் வீரர் ஜாகிர் கான் போல துல்லியமாக வீசும் அர்ஷிதீப் தீப் சிங் நீண்ட நாட்கள் இந்திய அணியில் விளையாடி வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று வீரேந்திர சேவாக் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் இவரும் சிறந்த டெத் பவுலராக உருவாகியுள்ளதாக பாராட்டினார்.

Advertisement