மும்பை அணியின் பயிற்சியாளர் பொல்லார்ட்.. டிம் டேவிட்டுக்கு தண்டனை வழங்கிய ஐபிஎல் நிர்வாகம்.. காரணம் என்ன?

Pollard Mi
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தங்களுடைய முதல் 7 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான தங்களுடைய 7வது போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை போராடி வெற்றி கண்டது. முன்னதாக இந்த வருடம் மும்பை கிரிக்கெட் அணிக்கு பல தருணங்களில் நடுவர்கள் சாதகமாக நடந்து கொள்வதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வீசிய பின் நாணயத்தை தலைகீழாக எடுத்து மும்பை வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்ததை ரசிகர்கள் வீடியோ ஆதாரத்துடன் விமர்சித்தனர். அதனால் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் நாணயம் எப்படி விழுகிறது? அதை நடுவர் சரியாக அறிவிக்கிறாரா? என்பதை பற்றி கேமராமேன் அருகே சென்று படம் பிடித்து காண்பித்தார்.

- Advertisement -

அதிரடி அபராதம்:
அதனால் பிரச்சனை ஓய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால் அதே போட்டியில் 15வது ஓவரின் கடைசி பந்தில் சூரியகுமார் யாதவுக்கு எதிராக அர்ஷிதீப் சிங் ஒய்ட் யார்கர் வீசினார். அதை சூரியகுமார் அடிக்காமல் தவற விட்ட நிலையில் களத்தில் இருந்த நடுவர் ஒயிட் வழங்கவில்லை. ஆனால் அதை பெவிலியினில் இருந்து பார்த்த மும்பை அணியின் பயிற்சியாளர் கைரன் பொல்லார்ட் மற்றும் டிம் டேவிட் ரிவியூ எடுக்குமாறு சூரியகுமாருக்கு சைகை செய்தனர்.

அதைத் தொடர்ந்து சூரியகுமார் யாதவ் ரிவ்யூ எடுத்தார். ஆனால் அப்போது “பெவிலியனில் இருந்தவர்கள் சொன்ன பின் சூரியகுமார் ரிவ்யூ எடுத்ததால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது” என்று நடுவரிடம் பஞ்சாப் கேப்டன் சாம் கரண் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் அதையெல்லாம் மதிக்காத நடுவர் ரிவியூவை ஏற்றுக் கொண்டார். பின்னர் அதை சோதித்த 3வது நடுவர் மும்பைக்கு ஒய்ட் வழங்கினார்.

- Advertisement -

அதனால் மும்பைக்கு சாதகமாக நடுவர்கள் நடந்து கொள்வதாக மீண்டும் எதிரணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் விமர்சித்தனர். குறிப்பாக 2017 டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பெவிலியனில் இருந்த பயிற்சியாளர்களை பார்த்து விட்டு எல்பிடபுள்யூ ரிவியூ எடுத்தார். அதை இந்திய கேப்டன் விராட் கோலி தடுத்து நிறுத்தினார். கிட்டத்தட்ட அதே போல அந்த இடத்தில் மும்பை அணியினர் நடந்து கொண்டதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

இதையும் படிங்க: மும்பை அணியில் ஏற்பட்ட விரிசல்.. மீண்டும் புகையும் நெருப்பு? பாண்டியாவுக்கு எதிராக நபி.. விவரம் இதோ

இந்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கைரன் பொல்லார்ட் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் 2.20 விதிமுறையை மீறியதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே அந்த இருவருக்கும் அப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து 20% அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டதால் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படாது என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Advertisement