இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-ஆவது லீக் போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசஸ்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. சன் ரைசர்ஸ் அணியின் சார்பாக அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 76 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 58 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து சரியாக 200 ரன்களை மட்டுமே குவித்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியானது த்ரில் வெற்றியை ருசித்தது. அதோடு இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணியானது 10 போட்டிகளில் ஆறு வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தினை பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : இது உண்மையிலேயே ஒரு அற்புதமான போட்டியாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்பதற்கு இந்த போட்டி ஒரு சான்று. புவனேஸ்வர் குமார் கடைசி பந்தில் மிகச் சிறப்பாக வீசி விக்கெட்டை வீழ்த்தியதோடு சேர்த்து எங்களுக்கு வெற்றியையும் தேடித்தந்தார்.
மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் போட்டி இன்னும் சுலபமாக இருந்திருக்கும். நடராஜன் மிகச் சிறப்பாக யார்க்கர் வீசும் ஒரு பந்துவீச்சாளர். அவரால் இந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் முக்கியமான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்தினார். அதோடு இந்த மைதானத்தில் அவர் மிக சிறப்பாக பந்து வீசியுள்ளார்.
இதையும் படிங்க : இவரை எடுக்காதது இந்தியாவுக்கு தான் லாஸ்.. பும்ராவை மிஞ்சிய நடராஜன்.. நடப்பு சீசனில் அபார சாதனை
200 ரன்கள் என்பது எட்டக்கூடிய ஸ்கோர் தான் இருந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். நிதிஷ் ரெட்டி கடினமான சூழ்நிலையில் களமிறங்கினாலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். களத்தில் அவருடைய செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. பேட்டிங்கில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் அவர் கை கொடுக்கிறார் என பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.