மும்பை அணியில் ஏற்பட்ட விரிசல்.. மீண்டும் புகையும் நெருப்பு? பாண்டியாவுக்கு எதிராக நபி.. விவரம் இதோ

Mohammad Nabi
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு ஆரம்பத்திலேயே சூரியகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் இன்ஸ்டாகிராமில் மறைமுகமான எதிர்ப்பை தெரிவித்தனர். அதே போல 5 கோப்பைகளை வென்று கொடுத்த நன்றியை மறந்து ரோஹித்தை கழற்றி விட்டதை பொறுத்துக் கொள்ளாத ரசிகர்கள் மும்பை அணிக்கு நேரடியான எதிர்ப்பை தெரிவித்தனர்.

அந்த சூழ்நிலையில் முதல் போட்டியிலேயே பதவி கைக்கு வந்ததும் ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தினார். அதனால் கோபமடைந்த மும்பை ரசிகர்கள் தங்களுடைய கேப்டன் என்றும் பார்க்காமல் பாண்டியாவுக்கு மைதானங்களில் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

மீண்டும் புகையும் நெருப்பு:
அதற்கிடையே மும்பை அணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பாண்டியா தலைமையில் ஒரு பிரிவும் ரோகித் சர்மா தலைமையில் ஒரு பிரிவு இருப்பதாகவும் செய்திகள் வலம் வந்தன. அதை லசித் மலிங்காவை பயிற்சியாளர் என்ற முறையில் பாண்டியா மதிக்காதது, பாண்டியாவை மதிக்காமல் ரோகித் சர்மாவிடம் பும்ரா ஆலோசனை கேட்டது போன்ற வீடியோ துளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உறுதி செய்தன.

இந்நிலையில் ஏப்ரல் 18ஆம் தேதி பஞ்சாப்புக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஆனால் அந்தப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட நட்சத்திர ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட பந்து வீசும் வாய்ப்பை வழங்கவில்லை. அதனால் ஏமாற்றமடைந்த ஒரு ஆப்கானிஸ்தான் ரசிகர் அது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது பின்வருமாறு.

- Advertisement -

“சில நேரங்களில் உங்களுடைய கேப்டன் எடுக்கும் முடிவுகள் மிகவும் வேடிக்கையாகவும் மக்களுக்கு ஆச்சரியத்தை கொடுப்பதாகவும் இருக்கிறது. இன்று முகமது நபி பந்து வீசவில்லை. இருப்பினும் கேம் சேஞ்சரான அவர் முக்கியமான நேரத்தில் 2 கேட்ச்கள் பிடித்து, 1 ரன் அவுட் செய்து வெற்றியில் பங்காற்றினார்” என்று பதிவிட்டார். அதை பார்த்த முகமது நபி தம்முடைய மனதில் உள்ளதை அப்படியே சொன்ன அந்த ரசிகரின் பதிவை தம்முடைய இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தார்.

இதையும் படிங்க: தல தோனிக்கு ஸ்பெஷல் கௌரவ மரியாதை கொடுத்த கேஎல் ராகுல்.. அவரையே மிஞ்சி அபார சாதனை

அதை பார்த்த ரசிகர்கள் கேப்டன் பாண்டியாவுக்கு எதிராக இருப்பதாலேயே முகமது நபி இதை ஷேர் செய்துள்ளதாக சந்தேகித்து வருகின்றனர். அத்துடன் இதிலிருந்து பாண்டியா மீது முகமது நபி அதிருப்தியில் இருப்பது தெளிவாக தெரிவதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். மொத்தத்தில் மும்பை அணியில் விரிசல் எனும் நெருப்பு தொடர்ந்து புகழ்ந்து கொண்டே இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

Advertisement