பரபரப்பான திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 50வது லீக் போட்டியில் ராஜஸ்தானை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அதனால் தங்களுடைய 6வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் நூலிலையில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
முன்னதாக அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் டிராவிஸ் ஹெட் 58, நிதிஷ் ரெட்டி 76*, ஹென்றிச் க்ளாஸென் 42* ரன்கள் எடுத்த உதவியுடன் 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் டக் அவுட்டானாலும் ரியான் பராக் 77, ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.
ஸ்டைன் ஆலோசனை:
ஆனால் கடைசியில் ஹெட்மயர் 13, ரோவ்மன் போவல் 27 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்யத் தவறினர். குறிப்பாக புவனேஸ்வர் குமார் வீசிய கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது ரோவ்மன் போவல் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். அப்போது ரோவ்மன் போவல் ரிவியூ எடுத்தும் அவுட் என்பது தெரிய வந்ததால் ராஜஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
ஒருவேளை அந்த இடத்தில் அம்பயர் ரோவ்மன் போவல் அவுட்டில்லை என்று அறித்திருந்தாலும் ராஜஸ்தான் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கும். ஏனெனில் “ஐசிசி அப்பெண்டிஸ் டி” விதிமுறைப்படி களத்தில் உள்ள நடுவர் அவுட் என்று கொடுத்த தீர்ப்பை 3வது நடுவரால் நாட் அவுட் என்று மாற்றி வழங்கப்படும் போது பேட்ஸ்மேன் தொடர்ந்து விளையாடலாம். ஆனால் அந்த பந்து காலாவதியாகி விடும்”
இதை தெளிவாக புரிந்து கொள்வதற்கு எடுத்துக்காட்டாக 18.1வது பந்தில் ரோவ்மன் போவல் அவுட்டானதாக வைத்துக்கொள்வோம். அந்த பந்தில் நடுவர் அவுட் கொடுத்துள்ளார். ஒருவேளை அந்தத் தீர்ப்பை 3வது நடுவர் நாட் அவுட் என்று மாற்றி வழங்கினால் 18.1வது பந்து காலாவதியாகிவிடும். எனவே மீண்டும் 18.2வது பந்திலிருந்தே போட்டி தொடர்ந்து நடைபெறும். இந்நிலையில் இந்த பயனற்ற விதிமுறையை மாற்றுவதற்கு டேல் ஸ்டைன் ட்விட்டரில் ஆலோசனை தெரிவித்துள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: எல்லாமே இருக்கு.. 2024 டி20 உலகக் கோப்பை இந்தியா ஜெயிக்கும்.. குமார் சங்ககாரா சொல்லும் 2 காரணம்
“அடிப்படையில் நாம் பேஸ்பால் ஸ்டைலில் விளையாட வேண்டும். அதாவது ஆடி முடிக்கும் வரை பந்து காலாவதியாகவில்லை என்று கருதுங்கள். அதனால் பேட்டிங் செய்யும் அணி தொடர்ந்து ஓடலாம். பவுலிங் செய்யும் அணி தொடர்ந்து ஃபீல்டிங் செய்யலாம். அதன் பின் அது எல்டபுள்யூவா அல்லது கேட்ச்சா அல்லது நோ-பாலா என்பதை பார்த்துக் கொள்ளலாம். அவுட் என்றால் அவுட்டை கொடுங்கள் அல்லது எல்டபுள்யூவில் ரன் எடுத்திருந்தால் அதைக் கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.



