அசத்திய பஞ்சாப்! 9 வருடங்களுக்கு பின் மோசமான தோல்வியை சந்தித்த சென்னையின் பரிதாபம் – விவரம் இதோ

CSK vs PBKS 3
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 3-ஆம் தேதியன்று நடந்த 11-வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின. ப்ராபோர்ன் மைதானத்தில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 4 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ராஜபக்சாவை 9 ரன்களில் எம்எஸ் தோனி அற்புதமாக ரன் அவுட் செய்தார்.

CSKvsPBKS

- Advertisement -

இதனால் 14/2 என மோசமான தொடக்கத்தை பெற்ற பஞ்சாப் அணியை அடுத்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானுடன் இணைந்து அதிரடியாக மீட்டெடுத்தார். சென்னை பவுலர்களை பந்தாடிய இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்த நிலையில் 24 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 33 ரன்கள் எடுத்த ஷிகர் தவான் ஆட்டமிழந்தார்.

கலக்கிய லியாம் லிவிங்ஸ்டன்:
அவருடன் மிரட்டலாக பேட்டிங் செய்து கொண்டிருந்த லியம் லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 மெகா சிக்ஸர்கள் உட்பட அரைசதம் அடித்து 60 ரன்களில் அவுட்டானர். அதைப் பயன்படுத்திய சென்னை பவுலர்கள் அடுத்து வந்த வீரர்களை சொற்ப ரன்களில் அவுட் செய்து பஞ்சாப் அணியை 200 ரன்கள் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினர். இறுதியில் ஜித்தேஷ் சர்மா 3 சிக்சர்கள் உட்பட 26 (17) ரன்களை குவிக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்த பஞ்சாப் 180 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பில் பந்துவீச்சில் அசத்திய பிரிட்டோரியஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Livingstone

அதை தொடர்ந்து 181 என்ற நல்ல இலக்கை துரத்திய சென்னை அணிக்கு நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் ருதுராஜ் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அவருடன் களமிறங்கிய மற்றொரு அனுபவ தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 13 (10) ரன்களில் நடையை கட்டினார். இதனால் 14/2 தடுமாறிய சென்னைக்கு அடுத்து களமிறங்கிய மொயின் அலி மற்றும் கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து ட்க் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி அளித்தனர். போதாக்குறைக்கு மற்றொரு அனுபவ வீரர் அம்பத்தி ராயுடு 13 ரன்களில் அவுட்டானதால் 36/5 என திண்டாடிய சென்னையின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது.

- Advertisement -

போராடிய துபே, அசத்திய பஞ்சாப்:
அந்த இக்கட்டான நிலையில் 100 ரன்களைக் கூட தொடாது என எதிர்பார்க்கப்பட்ட சென்னைக்கு நடுவரிசையில் களமிறங்கிய இளம் வீரர் ஷிவம் துபே உடன் இணைந்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் ஒருபுறம் விக்கெட்டை விடாமல் தோனி நிலைத்து நிற்க மறுபுறம் பட்டையை கிளப்பிய சிவம் துபே வெறும் 30 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்து அவுட்டானார். அந்த நேரத்தில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ட்வயன் ப்ராவோ முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக அடுத்து வந்த பிரெடோரியஸ் 8, ஜோர்டான் 5 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வரிசையாக நடையை கட்டினர். இதனால் மறுபுறம் 28 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து போராடிக் கொண்டிருந்த எம்எஸ் தோனியும் அவுட்டானதால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சென்னை 126 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

PBKS vs CSK

இதன் காரணமாக 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பஞ்சாப் இந்த வருடம் பங்கேற்ற 3 போட்டிகளில் 2-வது வெற்றியை பெற்று அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ராகுல் சஹர் 3 விக்கெட்டுகளையும் வைபவ் அரோரா மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இந்த அசத்தலான வெற்றியில் 60 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய லிவிங்ஸ்டன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

9 வருடங்களுக்கு பின் தோல்வி:
மறுபுறம் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடும் சென்னை தனது முதல் 2 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 6 விக்கெட் வித்தியாசத்திலான அடுத்தடுத்த தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் நேற்று நடந்த பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி மீண்டும் படுதோல்வி அடைந்தது. இதனால் வரலாற்றிலேயே ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளில் அடுத்தடுத்து 3 தோல்விகளை பதிவு செய்துள்ள சென்னை வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் படுதோல்வியை சந்தித்துள்ளது.

CSK vs PBKS

அதைவிட இந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி 9 வருடங்களுக்கு பின் முதல் முறையாக 50க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு மும்பைக்கு எதிராக நடந்த ஒரு லீக் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்த சென்னை வரலாற்றிலேயே தனது மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்திலான தோல்வியை பதிவு செய்தது.

இதையும் படிங்க : இவ்ளோ சூப்பரா ஆடியும் மீண்டும் தோனியை நியாயமில்லாமல் கலாய்க்கும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

அதன்பின் தற்போது 9 வருடங்களுக்குப் பின் த்ற்போது 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்க்கு எதிராக தோற்ற அந்த அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது 2-வது மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்த பரிதாபத்துக்கு உள்ளாகியுள்ளது.

Advertisement