10% கமிஷன் வாங்குறீங்கள்ல அப்றம் என்ன? அந்த வீரர்களுக்கு பிசிசிஐ அபராதம் போடணும்.. கவாஸ்கர் காட்டம்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் மும்பை, குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் ஏற்கனவே வெளியேறிய நிலையில் கொல்கத்தா முதல் அணியாக பிளே ஆஃப் ஆற்றுக்கு தகுதி பெற்றது. அதனால் எஞ்சியுள்ள 3 இடத்தை பிடிப்பதற்கு நடப்பு சாம்பியன் சென்னை உள்ளிட்ட 6 அணிகள் போட்டியிட்டு வருகின்றன.

குறிப்பாக ஆரம்பத்திலேயே 6 தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த பெங்களூரு முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் 5 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்ற அந்த அணி தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு பெங்களூரு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

கவாஸ்கர் விளாசல்:
ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி ஆகிய 2 முக்கியமான இங்கிலாந்து வீரர்கள் பெங்களூரு அணியிலிருந்து விலகியுள்ளனர். சொல்லப்போனால் மொயின் அலி, ஜோஸ் பட்லர் உள்ளிட்ட அனைத்து இங்கிலாந்து வீரர்களும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக ஐபிஎல் தொடரிலிருந்து இப்போதே விலகியுள்ளனர். இந்நிலையில் ஒப்பந்தப்படி முழுமையாக விளையாடாமல் இப்படி வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி மிட் டே பத்திரிகையில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “மற்ற அனைத்தையும் விட வீரர்கள் தங்களின் நாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் ஆனால் ஐபிஎல் அணி நிர்வாகத்திடம் முழு சீசனில் விளையாடுகிறோம் என்று உறுதியளித்து விட்டு இப்படி முக்கிய நேரத்தில் வெளியேறினால் அது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்”

- Advertisement -

“இதற்காக அந்த வீரர்களின் சம்பளத்திலிருந்து கணிசமான தொகையை உரிமையாளர்கள் கழிப்பதற்கான அனுமதியை கொடுப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீரரும் பெறும் கட்டணத்தின் 10% கமிசனை அந்த வீரர் சேர்ந்த வாரியத்திற்கு வழங்கக் கூடாது. ஒருவேளை வாரியம் அந்த உத்தரவாதத்தை மீறி சென்றிருந்தால் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில் வாரியங்களுக்கு ஐபிஎல் தொடரில் மட்டுமே இந்த 10% கமிஷன் கிடைக்கிறது. வேறு எங்கும் கிடைப்பதில்லை”

இதையும் படிங்க: இம்முறையும் பிளே ஆஃப் போகலன்னா.. ஆர்சிபி அணிக்கு அவரை புதிய கேப்டனா போடலாம்.. ஹர்பஜன் ஓப்பன்டாக்

“இருப்பினும் இவற்றையெல்லாம் செய்யாத பிசிசிஐயின் பெருந்தன்மைக்கு வெளிநாட்டு வாரியங்கள் நன்றி தெரிவிக்குமா? கண்டிப்பாக நன்றி சொல்ல மாட்டார்கள்” என்று கூறினார். இங்கிலாந்து மட்டுமன்றி வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் காலம் காலமாக ஐபிஎல் தொடரிலிருந்து இப்படி கடைசி நேரத்தில் வெளியேறுவது வழக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement