இவ்ளோ சூப்பரா ஆடியும் மீண்டும் தோனியை நியாயமில்லாமல் கலாய்க்கும் ரசிகர்கள் – நடந்தது என்ன?

MS Dhoni CSK
- Advertisement -

மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை பந்தாடிய பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 180/8 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக ஒரு கட்டத்தில் அந்த அணி 14/2 என தடுமாறிய வேளையில் பட்டைய கிளப்பிய இங்கிலாந்தின் லியம் லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 60 ரன்கள் விளாசி காப்பாற்றினார். சென்னை சார்பில் பந்துவீச்சில் அசத்திய பிரிடோரியஸ் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

9-வது இடத்தில் சென்னை:
அதன்பின் 181 என்ற இலக்கை சேசிங் செய்த சென்னை அணிக்கு அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்கள். குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் 1 ரன்னில் அவுட்டாக அவருடன் களமிறங்கிய ராபின் உத்தப்பா 13 (10) ரன்களில் ஏமாற்றினார். ஆனால் அதைவிட அடுத்து களமிறங்கிய முக்கிய வீரர் மொயீன் அலியும் கேப்டன் ரவீந்திர ஜடேஜாவும் அடுத்தடுத்து டக் அவுட்டாகி சென்னைக்கு அதிர்ச்சி அளித்தனர். அந்த இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய ராயுடுவும் 13 ரன்களில் அவுட்டானதால் 36/5 என திண்டாடிய சென்னையின் தோல்வி ஆரம்பத்திலேயே உறுதியானது.

- Advertisement -

அந்த மோசமான நேரத்தில் ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அடுத்து களமிறங்கிய சிவம் துபேவுடன் இணைந்து சென்னையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதில் 30 பந்துகளில் அதிரடியாக பேட்டிங் செய்த சிவம் துபே 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் உட்பட 57 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த டுவைன் பிராவோ டக் அவுட்டாகி கடுப்பேற்றினார். அந்த சமயம் மறுபுறம் 28 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து போராடிக்கொண்டிருந்த எம்எஸ் தோனியும் அவுட்டானதால் 18 ஓவர்களில் 126 ரன்களுக்கு சுருண்ட சென்னை பரிதாப தோல்வி அடைந்தது.

டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிய தோனி:
இந்த தோல்வியால் நடப்பு சாம்பியனாக விளையாடும் சென்னை இந்த வருடம் இதுவரை பங்கேற்ற கொல்கத்தா, லக்னோ மற்றும் பஞ்சாப் ஆகிய 3 அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்விகளை பதிவு செய்து பரிதாபத்திற்கு உள்ளானது.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் 28 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த எம்எஸ் தோனி நேற்றைய போட்டியில் மீண்டும் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடினார் என நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்க்கின்றனர். அதிலும் விக்கெட்டுகள் விழுந்தபோது அதிரடியாக விளையாடாமல் மெதுவாக விளையாடிய அவரால்தான் சென்னை தோல்வி அடைந்தது என ஒருசில ரசிகர்கள் பேசுகின்றனர். மேலும் பினிஷர் எனப் பெயர் பெற்ற அவர் “40 வயதை கடந்த முடிந்துபோன பினிஷர்” என நிறைய ரசிகர்கள் வகைவகையாக கலாய்க்கின்றனர்.

என்ன நியாயம்:
ஆனால் அவரை கலாய்ப்பதில் எந்தவித நியாயமும் கிடையாது என்பதே நிதர்சனமான உண்மையாகும். ஏனெனில் நேற்றைய போட்டியில் 181 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு அதன் முக்கிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பில்லாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 36/5 என ஆரம்பத்திலேயே திண்டாடியது.

- Advertisement -

1. அந்த சமயத்தில் யாராக இருந்தாலும் விக்கெட்டுகளை விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதைத்தான் தோனியும் கச்சிதமாக செய்து கொண்டிருந்தார். அதுபோல விக்கெட் தடுத்து நிறுத்துவதற்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்படும்.

2. அந்த வகையில் அவருடன் ஜோடி சேர்ந்த சிவம் துபே அதிரடியாக விளையாடியதால் மறுபுறம் அவருக்கு உறுதுணையாக நின்ற எம்எஸ் தோனி மெதுவாக பேட்டிங் செய்தார். ஒருவேளை அவரும் அடிக்கப் போய் முன்கூட்டியே அவுட்டாகியிருந்தால் 100 ரன்களை கூட தொட முடியாமல் சென்னை படுமோசமான அவமானம் நிறைந்த தோல்வியை சந்தித்திருக்கும் என்பதை அவரை கலாய்க்கும் ரசிகர்கள் புரிந்து கொள்வதில்லை.

- Advertisement -

3. மேலும் சமீபகாலங்களாக அவர் பழைய தோனியாக அதிரடியாக விளையாடவில்லை என்பது உண்மை என்றாலும் இந்த வருடம் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 62/5 என இதேபோல சென்னை திண்டாடிய போது களமிறங்கிய அவர் 38 பந்துகளில் 50* ரன்கள் விளாசி அபார பினிஷிங் கொடுத்ததை அவரை முடிந்து போன பினிஷர் எனக்கூறும் ரசிகர்கள் அதற்குள் மறந்து விட்டார்களா என்று தெரியவில்லை.

4. இது மட்டுமல்லாமல் டெஸ்ட் இன்னிங்ஸ் என அவரை ரசிகர்கள் கலாய்க்கும் நிலைமை ஏற்பட்ட 90% போட்டிகளில் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பிய நிலையில் ஒரு மிடில் ஆர்டர் பேட்டராக களமிறங்கும் எம்எஸ் தோனி விக்கெட் விடாமல் தடுத்து நிறுத்த மெதுவாக விளையாடி போராடுவார். அதற்கு பரிசாக அவருக்கு டெஸ்ட் இன்னிங்ஸ் என்ற பெயர் கிடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

5. ஐபிஎல் மட்டுமல்ல இந்தியாவுக்கும் இது போல நிறைய தருணங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பிய நிலையில் இந்தியாவின் மானத்தை காப்பாற்ற போராடிய அவரை டெஸ்ட் இன்னிங்ஸ் என ரசிகர்கள் கலாய்த்ததை பலமுறை பார்த்துள்ளோம்.

7. விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பார்கள். அந்த வகையில் சச்சின் உள்ளிட்ட வீரர்கள் கூட எல்லாப் போட்டிகளிலும் இந்தியாவை காப்பாற்றியது கிடையாது. அதேபோல் தோனியும் 100க்கு 100 போட்டிகளில் அதிரடியாக விளையாடி அபார பினிஷிங் செய்து வெற்றியை பெற்றுக் கொடுத்தது கிடையாது என்றாலும் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் முழுமூச்சுடன் போராடி வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளதால் தான் இவ்வளவு புகழை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : முதல் பந்தில் இருந்தே நாங்கள் நினைச்ச அந்த விஷயம் நடக்கல – ஹாட்ரிக் தோல்விக்கு பின்னர் புலம்பிய ஜடேஜா

8. எனவே தனது அணியை சரிவில் இருந்து காப்பாற்ற போராடும் அவரை டெஸ்ட் இன்னிங்ஸ் என ரசிகர்கள் கலாய்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. சொல்லப்போனால் அவரின் ரசிகர்கள் என்றும் அப்படி அவரை கலாய்க்க மாட்டார்கள். அவருக்கு பிடிக்காத ரசிகர்கள் எனப்படும் ஹேட்டர்கள் தான் இப்படி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

Advertisement