ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. முன்னதாக இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை மும்பை புதிய கேப்டனாக அறிவித்தது. மறுபுறம் கேப்டன்ஷிப் கைக்கு வந்ததும் முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு பாண்டியா வற்புறுத்தினார்.
அது ஏற்கனவே அதிருப்தியில் இருந்த மும்பை ரசிகர்களை மேலும் கோபமடைய வைத்தது. அந்த நிலையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு தாம் ரசிகன் அல்ல என்று ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். ஆனால் அப்படிப்பட்ட கோட்பாட்டை கொண்ட அவரை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பாண்டியா தலைமையிலான மும்பை நிர்வாகம் வலுக்கட்டாயமாக இம்பேக்ட் வீரராக களமிறக்கியது.
கொல்கத்தா அணியில் ரோஹித்:
அந்த வகையில் அடுத்தடுத்து அவமானப்படுத்திய மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேறி அடுத்த வருடம் வேறு அணிக்காக விளையாடுவார் என்று ராயுடு, ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தனர். அதன் உச்சமாக அடுத்த வருடம் மும்பையிலிருந்து ரோஹித் சர்மா வெளியேறி கொல்கத்தா அணியில் விளையாடுவார் என்று உணர்வதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்திருந்தார்.
அந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. ஆனால் அப்போட்டி மழையால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக துவங்கியது. அப்போது கொல்கத்தா அணியின் உடைமாற்றும் அறைக்கு நேராக சென்ற ரோஹித் சர்மா அங்குள்ள வீரர்களுடன் மணிக்கணக்கில் அமர்ந்து பேசினார். அத்துடன் கொல்கத்தாவின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் ரோகித் சர்மா களத்தில் நீண்ட நேரம் பேசினார்.
அதனால் அடுத்த வருடம் ரோகித் கொல்கத்தா அணியில் தான் விளையாடுவார் என்று அந்த மீட்டிங்கில் உறுதி செய்யப்பட்டதாக ரசிகர்கள் பேசத் துவங்கினர். இந்நிலையில் அதை முற்றிலுமாக கொல்கத்தா அணியின் இயக்குனர் வெங்கி மைசூர் மறுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையாக இதைப் பற்றி எனக்கு கூட தெரியாது. அது ஒரு தேநீர் குடுவையில் ஏற்பட்ட புயல் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: கடந்த 4 ஆண்டுகளாக ஒரே அணிக்கு சாதகமான மே 18-ஆம் தேதி.. வெளியான அசத்தல் புள்ளி விவரம்
“ரோகித் மற்றும் அபிஷேக் ஆகியோர் நீண்ட காலம் நல்ல நண்பர்கள் என்பது கடவுளுக்கு தெரியும். யாரோ சில குறும்புகளை உருவாக்குவதற்காக இப்படி செய்திருக்கலாம். நானும் அவர்கள் இருவரிடமும் பேசினேன். அவர்கள் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். தங்களுடைய கைகளுக்கு அதிக நேரம் இருப்பதால் சிலர் இப்படி எழுதியிருக்கலாம்” என்று கூறினார்.