கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் – யார் புதிய கோச் தெரியுமா?

KKR
- Advertisement -

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உரிமையாளராக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. இந்த வருடம் அந்த அணிக்கு புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில வருடங்களாக பயிற்சியாளராக செயல்பட்டு வந்த நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் இந்த சீசனுடன் விடைபெற்று இங்கிலாந்தின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்கான வேலையை துவங்கியுள்ள கொல்கத்தா நிர்வாகம் தங்களது தலைமை பயிற்சியாளராக உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வரும் பிரபல பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்டை நியமித்துள்ளதாக நேற்று அறிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவுக்காக 36 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் கடந்த 1999இல் தனது மாநில அணியை கேப்டனாக ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்று கர்நாடகத்திடம் சந்தித்த தோல்வியால் கிரிக்கெட்டிலிருந்து மொத்தமாக ஓய்வு பெற்றார். அப்படி இந்தியா மற்றும் உள்ளூர் தொடரில் ஒரு கிரிக்கெட்டராக பெரிய வெற்றியை காண முடியாத அவர் அதற்காக மனம் தளராமல் தனது திறமைகளை இளம் வீரர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பயிற்சியாளராக அவதரித்தார். அவரின் திறமையை உணர்ந்து தங்களது பயிற்சியாக நியமித்த மும்பை 2003, 2004 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ரஞ்சிக் கோப்பையை வென்று அசத்தியது

- Advertisement -

அலெக்ஸ் பெர்குசன்:
அதன்பின் 2016இல் மீண்டும் மும்பைக்கு ரஞ்சிக் கோப்பையை வென்று விடைபெற்ற அவரை 2018 சீசனில் தங்களது பயிற்சியாளராக நியமித்த விதர்பா அந்த முதல் வருடத்திலேயே அதன் பலனை முதல் சாம்பியன் பட்டமாக வென்று அறுவடை செய்தது. அதற்கடுத்த 2019 சீசனிலும் விதர்பாவுக்கு ரஞ்சிக் கோப்பையை வென்று கொடுத்த அவர் தனது சொந்த மாநிலத்திற்கு ஏன் நம்மால் சாதிக்க முடியாது என்ற எண்ணத்துடன் அந்த அணியிலிருந்து விலகி மத்திய பிரதேசத்தின் பயிற்சியாளராக இந்த வருடம் பொறுப்பேற்றார்.

சொந்த மாநில வீரர்கள் என்பதால் அனைவரையும் புரிந்து கொண்டு அவர்களுக்கேற்ற பயிற்சியை கொடுத்ததால் இந்த வருட ரஞ்சி கோப்பையில் அபாரமாக செயல்பட்ட மத்திய பிரதேசம் பைனலில் 41 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பையை தோற்கடித்து வரலாற்றில் தங்களது முதல் சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது. அந்த வகையில் ஒரு கேப்டனாக தனது மாநிலத்துக்கு ரஞ்சிக் கோப்பையை வாங்கி கொடுக்க முடியாத சந்திரகாந்த் பண்டிட் ஒரு பயிற்சியாளராக கோப்பையை வென்று தனது வைராக்கியத்தில் வெற்றி கண்டார்.

- Advertisement -

இப்படி செல்லும் இடமெல்லாம் வெற்றியை பெற்றுக் கொடுத்து வரும் அவரை பிரபல கால்பந்தாட்டத்தின் பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசனுடன் ஒப்பிட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் “இந்திய கிரிக்கெட்டின் சர் அலெக்ஸ் பெர்குசன்” என மனதார பாராட்டினார். இப்படி உள்ளூர் அணிகளிலேயே அசத்தும் இவர் ஏன் ஐபிஎல் போன்ற பிரபலமான தொடரில் பணியாற்றவில்லை என்ற கேள்வியை இந்த வருட ரஞ்சி கோப்பை முடிந்ததும் செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர்.

அதற்கு கடந்த 2012இல் நடிகர் சாருக்கான் தன்னை தம்முடைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்படுமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்த சந்திரகாந்த் பண்டிட் ஒரு வெளிநாட்டு பயிற்சியாளரின் கீழ் துணை பயிற்சியாளராக செயல்பட விரும்பவில்லை என்பதால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

- Advertisement -

வைராக்கியத்தில் வெற்றி:
அந்த நிலையில் தற்போது தாம் நினைத்தவாரே ஒரு வெளிநாட்டவருக்கு கீழ் வேலை செய்யாமல் கொல்கத்தாவின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தனது வைராக்கியத்தில் அவர் சாதித்துள்ளார் என்றே கூறலாம். மேலும் இவ்வளவு தரமான பயிற்சியாளரை நியமித்ததற்காக ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நியமனம் பற்றி சந்திரகாந்த் பண்டிட் பெருமையுடன் பேசியது பின்வருமாறு. “இந்த பொறுப்பை ஏற்பதில் மிகவும் கௌரவமாக மகிழ்ச்சியடைகிறேன். நைட் ரைடர்ஸ் அணியுடன் தொடர்புடைய வீரர்களிடமிருந்து இந்த குடும்பத்தை பற்றிய கலாச்சாரம் வெற்றி பாரம்பரியம் பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். இந்த அணியில் அங்கம் வகிக்கும் துறை ஊழியர்கள் மற்றும் வீரர்களின் தரம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்த வாய்ப்பை பணிவு மற்றும் நேர்மறையான எதிர்பார்ப்புகளுடன் எதிர்நோக்குகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs ZIM : டாஸ் வென்ற இந்திய அணியில் 4 ஓப்பனர்களுக்கு இடம். என்ன டீம் செலக்சன் இது – பிளேயிங் லெவன் இதோ

இதை தொடர்ந்து அனில் கும்ப்ளே (பஞ்சாப்), ஆசிஸ் நெஹ்ரா (குஜராத்), சஞ்சய் பங்கார் (பெங்களூரு) ஆகியோருக்குப் பின் ஒரு ஐபிஎல் அணியின் தலைமை பயிற்சியாளராகும் 4வது இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

Advertisement