
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் பங்கேற்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டியிலும் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளை எளிதில் வீழ்த்தி இந்த தொடரின் அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்டது. இந்திய அணியின் இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து லீக் சுற்றில் எஞ்சியுள்ள கடைசி ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணிகள் சில மாற்றங்கள் இருக்கும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஏனெனில் ஏற்கனவே கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபடவில்லை என்பதனால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணிக்குள் வருவார் என்றும் கே.எல் ராகுல் துவக்க வீரராக களம் இறங்குவார் என்றும் பேசப்பட்டது. அதேபோன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக அர்ஷிதீப் சிங் விளையாடுவார் என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில் முகமது ஷமி விடயத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் வேகப்பந்து வீச்சாளரான ஜாகிர் கான் அட்வைஸ் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைக்கு இந்திய அணியில் இருக்கும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தான். அவர்தான் பந்துவீச்சு யூனிட்டை தற்போது தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.
எனவே இந்த லீக் சுற்றின் இறுதிப்போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த போட்டியின் முடிவு இந்திய அணியை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆனால் அதற்கு அடுத்து இந்திய அணி அரையிறுதியிலும், இறுதிப் போட்டியிலும் விளையாட இருக்கிறது. எனவே அந்த போட்டிகளுக்கு முகமது ஷமி இந்திய அணிக்கு மிகவும் அவசியம்.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு திறமை இருந்தா பாகிஸ்தானுடன் 30 மேட்ச்ல மோதுங்க.. யார் பலசாலின்னு தெரியும்.. சக்லைன் சவால்
எனவே இந்த போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் அவர் கடைசி கட்ட போட்டிகளின் போது மீண்டும் முழு திறனுடன் வர முடியும். அதேவேளையில் அர்ஷ்தீப் சிங்கை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வைக்கலாம். இது அவரது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என ஜாகிர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.