சர்வதேச கிரிக்கெட்டில் 1996 உலக சாம்பியனான பாகிஸ்தான் சமீப காலங்களாகவே தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாமல் தடுமாற்றமாக விளையாடி வருகிறது. குறிப்பாக பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல், 2021 டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் வென்றது. மற்ற அனைத்து முக்கியமான போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா வலுவான அணியாக செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவுக்கு விராட் கோலி நங்கூரமாக விளையாடி கிட்டத்தட்ட தனி ஒருவனாக பாகிஸ்தானை தோற்கடித்தார். 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இந்தியா அபார வெற்றி பெற்றது. 2024 டி20 உலகக் கோப்பையில் 119 ரன்களை வைத்தே பாகிஸ்தானை சுருட்டி இந்தியா வெற்றி பெற்றது.
பாதாளத்தில் பாகிஸ்தான்:
இது போக உலக அரங்கில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த தொடர்களில் தோற்கடித்து இந்தியா வரலாறு படைத்தது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாம்பியனாக திகழ்கிறது. பாகிஸ்தான் ஒருமுறை கூட தகுதி பெறாத நிலையில் இந்தியா 2021, 2023 அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன் ஃபைனலுக்கும் தகுதி பெற்று அசத்தியது.
மறுபுறம் 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்பே, 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான், 2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் பாகிஸ்தான் மண்ணை கவ்வியது. அதன் காரணமாக இந்தியாவுடன் மோதும் அளவுக்கு பாகிஸ்தான் தகுதியற்ற அணியாக பாதாளத்தில் திணறுகிறது என்ற பேச்சுக்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் உண்மையாகவே இந்தியாவிடம் திறமை இருந்தால் தங்களுடன் 30 போட்டிகளில் விளையாட முடியுமா? என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஸ்தாக் சவால் விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு சவால்:
இது பற்றி அவர் 24 நியூஸ் எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அரசியல் காரணங்களை புறம் தள்ளினால் இந்தியாவின் வீரர்கள் மிகவும் நன்றாக உள்ளனர். அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். ஒருவேளை நீங்கள் உண்மையாகவே நல்ல கிரிக்கெட் அணி என்றால் 10 டெஸ்ட், 10 ஒருநாள், 10 டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுங்கள்”
இதையும் படிங்க: அந்த 2 வெற்றியால் நல்ல ஃபார்மில் இருக்கோம்.. துபாயில் இந்தியாவை வீழ்த்துவோம்.. கிளன் பிலிப்ஸ்
“அப்போது யார் சிறந்தவர் என்பது தெளிவாகத் தெரிய வரும். நமது பிரச்சனைகளைத் தீர்த்து சரியான வழியில் சென்று சரியாக தயாரானால் இந்தியாவுக்கும் இந்த உலகுக்கும் பாகிஸ்தான் திடமான பதிலை சொல்ல முடியும்” என்று கூறினார். இங்கே 2024இல் சொந்த மண்ணில் கத்துக்குட்டி வங்கதேசத்திடம் டெஸ்ட் தொடரில் தோற்ற பாகிஸ்தான் தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு வெற்றியை கூட பெறாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.



