
ஐபிஎல் 2025 பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அந்தத் தொடரில் இந்திய அணிக்காக 3 ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக செயல்பட்ட தோனி மிகச்சிறந்த ஃபினிஷராகவும் கேப்டனாகவும் அறியப்படுகிறார். அதனால் 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதைப் பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் வருவார்கள். அதன் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே மஞ்சள் நிறத்தில் காட்சியளிப்பது வழக்கமாகும்.
அதே போல மும்பை, கொல்கத்தா போன்ற வெளியூர்களிலும் தோனிக்காக அங்குள்ள ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியை அணிந்து ஆதரவளித்து வருகின்றனர். அதனால் அது கொல்கத்தாவா அல்லது சென்னையா என்று வியக்கும் அளவுக்கு எதிரணியின் மைதானங்களிலும் தோனிக்கு அமோக வரவேற்பு காணப்படுகிறது. அந்த வரிசையில் கடந்த வருடம் லக்னோ – சென்னை அணிகள் மோதிய போட்டி லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற்றது.
அங்கே லக்னோ அணியை விட தோனிக்காக ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியை அணிந்து சிஎஸ்கே அணிக்காக ஆதரவு கொடுத்தனர். இந்நிலையில் தோனி விளையாடும் வரை இந்தியாவின் எந்த மைதானத்திலும் மஞ்சள் ஜெர்ஸி ரசிகர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாது என்று லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜஹீர் கான் கூறியுள்ளார். இது பற்றி ஜஹீர் கான் பேசியது பின்வருமாறு.
“எம்எஸ் தோனி விளையாடும் வரை மஞ்சள் நிறம் அனைத்து மைதானங்களிலும் டாமினேட் செய்யும். அது இப்படித்தான் இருக்க வேண்டும். தோனி அனைவராலும் விரும்பப்படக் கூடியவர். அவர் விளையாடும் வரை அனைத்து மைலானங்களும் அப்படித்தான் இருக்கும்” என்று கூறினார். மேலும் மயங் யாதவ், மோசின் கான், ஆவேஷ் கான் ஆகிய முக்கியமான லக்னோ அணி வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளனர்.
இதையும் படிங்க: இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸ் காரணமாக பாதிப்பு அவங்களுக்கு தான் அதிகம் – ஹார்டிக் பாண்டியா கருத்து
அது பற்றி ஜஹீர் கான் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் இது போன்ற காயங்கள் நிகழ்வது சகஜமான ஒன்றாகும். எங்களது வேகப்பந்து வீச்சாளர்களுடன் துணைப் பயிற்சியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்தத் தொடரில் வெற்றிகரமாக விளையாடுவதற்குத் தேவையான திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். எங்களிடம் 24 வீரர்கள் இருப்பதால் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது தெரியும்” எனக் கூறினார்.