IND vs ENG : தோல்வியிலும் பந்துவீச்சில் அசத்திய சாஹல், 39 வருடங்களுக்கு பின் படைத்த தனித்துவமான சாதனை

Yuzvendra Chahal
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலே தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 14-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் இந்திய நட்சத்திரம் விராட் கோலி காயத்திலிருந்து மீண்டு அணியில் இணைந்த நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து கடந்த போட்டியை போலல்லாமல் ஆரம்பம் முதலே நிதானமாக ரன்களை சேர்க்க துவங்கியது. ஆனாலும் சிறப்பாக பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்துவீச்சில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 23 (33) ரன்களிலும் ஜானி பேர்ஸ்டோ 38 (38) ரன்களிலும் அவுட்டாகி சுமாரான தொடக்கத்தையே கொடுத்தனர். அந்த நிலைமையில் அதிரடி காட்ட முயன்ற ஜோ ரூட் 11 (21) ரன்களிலும் பென் ஸ்டோக்ஸ் 21 (33) ரன்களிலும் சஹால் வீசிய அற்புதமான சுழலில் சிக்கி அவுட்டாக கேப்டன் ஜோஸ் பட்லரும் 4 (5) ரன்களின் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

- Advertisement -

சொதப்பிய இந்தியா:
அதனால் 102/5 என தடுமாறிய இங்கிலாந்துக்கு 2 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடி காட்ட முயன்ற லியம் லிவிங்ஸ்டன் 33 (33) ரன்களில் அவுட்டானார். அந்த மோசமான நிலைமையில் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மொய்ன் அலி மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் பொறுப்பான முக்கியமான 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதில் மொய்ன் அலி 47 (64) ரன்களும் டேவிட் வில்லி 41 (49) ரன்களும் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 49 ஓவர்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 247 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கடந்த முறை 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோகித் சர்மா – ஷிகர் தவான் ஜோடி 0, 9 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. அந்த சமயத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் 16 (25) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் 31/4 என படுமோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவை மிடில் ஆர்டரில் காப்பாற்ற முயன்ற சூர்யகுமார் யாதவ் 27 (29) ஹர்திக் பாண்டியா 29 (44) என நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டானதால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

- Advertisement -

வளைத்த சஹால்:
கடைசியில் ரவீந்திர ஜடேஜா 29 (44) ரன்களும் முகமது சமி 23 (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பவுலிங்கில் வந்த வாக்கிலேயே அவுட்டானதால் 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்ட இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தளவுக்கு பந்துவீச்சில் மிரட்டிய இங்கிலாந்தின் சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 6 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனால் முதல் போட்டியில் தங்களை 110 ரன்களுக்கு சுருட்டி வரலாற்று தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த இங்கிலாந்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து மிரட்டியுள்ளது.

இப்போட்டியில் பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்திக்க நேரிட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. இருப்பினும் பேட்டிங்க்கு சாதகமான லார்ட்ஸ் மைதானத்தில் வலுவான இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை ஆல் அவுட் செய்யும் அளவுக்கு இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசினர். குறிப்பாக சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி பேர்ஸ்டோ, ரூட், ஸ்டோக்ஸ், மொய்ன் அலி ஆகிய 4 உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த சஹால் இந்தியாவின் வெற்றிக்காக பந்துவீச்சில் போராடினார்.

- Advertisement -

தனித்துவ சாதனை:
இப்போட்டியில் 4 விக்கெட்டுகளை எடுத்த அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பவுலர் மற்றும் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற தனித்துவமான சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 1983 உலக கோப்பையில் இந்த மைதானத்தில் நடந்த மாபெரும் இறுதி போட்டியில் வலுவான வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து இந்தியா முதல் முறையாக உலககோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய முக்கிய மொஹிந்தர் அமர்நாத் 3 விக்கெட்டுகள் எடுத்திருந்ததே முந்தனையை சாதனையாக இருந்தது. தற்போது 39 வருடங்கள் கழித்து சஹால் அந்த பட்டியலில் தனது பெயரை முதலாவதாக பதித்துள்ளார். அந்த பட்டியல்:

இதையும் படிங்க : IND vs ENG : இது எங்களோட பெஸ்ட் இல்ல. ஆனாலும் – வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டி

1. யுஸ்வென்ற சஹால் : 4/47, 2022*
2. மொஹிந்தர் அமர்நாத் : 3/12, 1983
3. ஆஷிஷ் நெஹ்ரா : 3/26, 2004
4. ஹர்பஜன் சிங் : 3/28, 2004

Advertisement