எனக்கு இதெல்லாம் பழகிப்போச்சி .. ஆனாலும் என்னோட ஆசை இதுமட்டும் தான் – உ.கோ வாய்ப்பை இழந்த சாஹல் பேட்டி

Yuzvendra Chahal 2
- Advertisement -

ஐசிசி 2023 உலகக் கோப்பையை வென்று சொந்த மண்ணில் சரித்திரம் படைப்பதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்தர சஹால் இடம் பெறாதது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. ஹரியானவை சேர்ந்த அவர் கடந்த 2016இல் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்தார்.

குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடி அசத்திய அவர் அதன் பின் ஃபார்மை இழந்ததால் கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டார். மறுபுறம் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் போராடி வந்ததன் காரணமாக நேரடியாக 2021 டி20 உலகக் கோப்பையில் அவர் விளையாடிய இடத்தை பெற்றார்.

- Advertisement -

பரவால்ல பழகிடுச்சு:
அந்த நிலையில் 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி ஊதா தொப்பியை வென்று கம்பேக் கொடுத்த சாஹலுக்கு மீண்டும் 2022 டி20 உலக கோப்பையில் அஸ்வின் இருந்ததால் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து 2023 ஐபிஎல் தொடரில் சற்று தடுமாற்றமாக செயல்பட்ட அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சுமாராக செயல்பட்டதால் நல்ல ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் பரிதாபமாக கழற்றி விடப்பட்டார்.

இருப்பினும் அக்சர் படேலுக்கு பதிலாக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு பதிலாக மீண்டும் அஸ்வின் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் ஒன்றல்ல இரண்டல்ல இத்தோடு 3 தொடர்ச்சியான உலக கோப்பையில் வாய்ப்பு கிடைக்காததால் அதற்கு பழகி விட்டதாக தெரிவிக்கும் சஹால் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல விரும்புவதாக பெருந்தன்மையுடன் பேசியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய அணியில் 15 பேர் தான் விளையாட முடியும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஏனெனில் உலகக்கோப்பையில் உங்களால் 17 அல்லது 18 வீரர்களை அழைத்து செல்ல முடியாது. அதற்காக நான் சற்று மோசமாக உணர்கிறேன். இருப்பினும் வாழ்க்கையில் இதை கடந்து நான் நகர பழகி விட்டேன். ஏனெனில் இது 3வது உலகக் கோப்பையாகி விட்டது. மேலும் இந்திய அணியில் நான் வேறு எந்த வீரருடனுன் போட்டியிடுவதாக நினைக்கவில்லை”

இதையும் படிங்க: அவர் தான் 2023 உ.கோ கேம் சேஞ்சரா.. இந்த தலைமுறையின் மகத்தான பிளேயரா வரப்போறாரு.. இளம் இந்திய வீரரை பாராட்டிய யுவி

“ஏனெனில் நான் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிவேன். மேலும் ஏதோ ஒருநாள் இந்திய அணியில் உங்களுடைய இடத்தில் விளையாடுவதற்கு மற்றொருவர் வருவார். எனவே நான் இந்த வகையில் அதை சவாலாக எடுத்துக் கொள்கிறேன். இது தனிநபர் விளையாட்டு அல்ல என்பதால் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் வேண்டும் என்பதே என்னுடைய இலக்காகும். அணியில் இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்கள் அனைவரும் என்னுடைய சகோதரர்களைப் போன்றவர்கள். அதனால் நான் இந்திய அணிக்கு ஆதரவு கொடுப்பேன்” என்று கூறினார்.

Advertisement