கேப்டனாக ரோஹித்.. 2023ஆம் ஆண்டின் சிறந்த கனவு ஒருநாள் அணியை வெளியிட்ட ஐசிசி.. 6 இந்தியர்களுக்கு இடம்

ICC ODI Team
- Advertisement -

சர்வதேச போட்டிகளில் 2023 காலண்டர் வருடம் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு முக்கியமானதாக அமைந்தது. ஏனெனில் அதில் சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக ஐசிசி 2023 உலகக் கோப்பையை நடத்தியது. அதில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்த நிலையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை குவித்து எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா இறுதிப்போட்டியில் தோற்றது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் 2023 காலண்டர் வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் அசத்திய சிறந்த வீரர்களை கொண்ட கனவு 11 பேர் அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ்க்கு பதிலாக இந்தியாவின் ரோகித் சர்மாவை ஐசிசி அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது.

- Advertisement -

கனவு அணி:
இருப்பினும் கடந்த வருடம் 1255 ரன்களை 52 என்ற அபார சராசரியில் குவித்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரோகித்தை தங்களுடைய அணியின் கேப்டன் மற்றும் முதல் துவக்க வீரராக ஐசிசி அறிவித்துள்ளது. 2வது துவக்க வீரராக உலகிலேயே உச்சகட்டமாக 1584 ரன்களை வெளுத்து வாங்கிய இந்தியாவின் சுப்மன் கில் தேர்வாகியுள்ளார். 3வது இடத்தில் ஃபைனலில் சதமடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த டிராவிஸ் ஹெட் பிடித்துள்ளார்.

4வது இடத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2023 ஒருநாள் போட்டியில் 1377 ரன்கள் குவித்து அசத்தியதால் தேர்வாகியுள்ளார். குறிப்பாக உலகக் கோப்பையில் மட்டும் 765 ரன்கள் அடித்து தொடர்நாயகன் விருது வென்ற அவர் சச்சினை முந்தி 50 ஒருநாள் சதங்கள் அடித்த முதல் வீரராக வரலாறு படைத்ததை மறக்க முடியாது என ஐசிசி கூறியுள்ளது.

- Advertisement -

5வது இடத்தில் 2023 காலண்டரில் 1204 ரன்கள் குவித்து அசத்திய நியூசிலாந்தின் டார்ல் மிட்சேல் மற்றும் 6வது இடத்தில் தென்னாப்பிரிக்காவுக்காக 2023 உலகக்கோப்பையில் அதிரடியாக விளையாடிய ஹென்றிச் கிளாசின் விக்கெட் கீப்பராக தேர்வாகியுள்ளார். அதே போல 7வது இடத்தில் தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் மார்கோ யான்சென் 8வது இடத்தில் 2023இல் 38 ஒருநாள் விக்கெட்டுகளை எடுத்த ஆஸ்திரேலியாவின் ஜாம்பா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச – பிளேயிங் லெவன் இதுதான்

9வது இடத்தில் இலங்கையை ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தெறிக்க விடுவதற்கு உதவி மொத்தம் 44 விக்கெட்டுகள் எடுத்த இந்தியாவின் முகமது சிராஜ் 10வது இடத்தில் 2023 காலண்டரில் 49 விக்கெட்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளார்கள். 11வது இடத்தில் உலகக் கோப்பையில் 24 விக்கெட் எடுத்த மிரட்டிய இந்தியாவின் முகமது ஷமி தேர்வாகியுள்ளார். அந்த அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், டிராவிஸ் ஹெட், விராட் கோலி, டார்ல் மிட்சேல், ஹென்றிச் க்ளாஸென், மார்கோ யான்சென், ஆடம் ஜாம்பா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி

Advertisement