வீடியோ : தமக்கு மிகவும் பிடித்த கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் வரலாறு படைத்த சஹால் – லெஜெண்ட்டாக சாதனை

Chahal 187
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 13ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு உலக புகழ் பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் கீழ் வரிசையில் தவிக்கும் இந்த 2 அணிகளுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு 2 பவுண்டரிகளுடன் அதிரடியை துவக்க முயற்சித்த ஜேசன் ராய் 10 (8) ரன்களில் ஹெட்மயரின் அசத்தலான கேட்ச்சால் அவுட்டாகி சென்றார்.

அவரை அவுட்டாக்கிய ட்ரெண்ட் போல்ட் மறுபுறம் அதிரடி காட்டிய ரஹ்மத்துல்லா குர்பாஸையும் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 18 (12) ரன்களில் சந்திப் சர்மாவின் சிறப்பான கேட்ச்சால் காலி செய்தார். அதனால் 29/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்ததாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா ஆகியோர் நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 3வது விக்கெட்டுக்கு 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

- Advertisement -

பிடித்த கொல்கத்தா:
இருப்பினும் அதில் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்ட நித்திஷ் ராணா 2 பவுண்டரியுடன் 22 (17) ரன்களில் ஹெட்மயரின் மற்றுமொரு சிறப்பான கேட்ச்சால் சஹால் சுழலில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஆண்ட்ரே ரசல் 10 (10) ரன்களில் அவுட்டாக மறுபுறம் நம்பிக்கை கொடுத்த வெங்கடேஷ் ஐயரும் 2 பவுண்டரி 4 சிக்சருடன் அரை சதமடித்து சஹால் சுழலில் 57 (42) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் பெரிய சறுக்களை சந்தித்த கொல்கத்தாவை கடைசி நேரத்தில் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட ரிங்கு சிங்கை 16 (18) ரன்களில் அவுட்டாக்கிய சஹால் திடீரென அச்சுறுத்தலை கொடுக்கக் கூடிய சர்தூள் தாக்கூரையும் 1 (2) ரன்னில் காலி செய்தார்.

அதனால் 20 ஓவர்களில் 149/8 ரன்களுக்கு கொல்கத்தாவை கட்டுப்படுத்திய ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக யுஸ்வென்ற சஹால் 4 ஓவரில் வெறும் 25 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதை விட இந்த 4 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்ற ட்வயன் ப்ராவோவின் ஆல் டைம் சாதனையை உடைத்த சஹால் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. யுஸ்வென்ற சஹால் : 187* (144 போட்டிகள்)
2. ட்வ்யன் ப்ராவோ : 183 (161 போட்டிகள்)
3. பியூஸ் சாவ்லா : 174 (176 போட்டிகள்)
4. அமித் மிஸ்ரா : 172 (160 போட்டிகள்)
5. ரவிச்சந்திரன் அஸ்வின் : 171 (196 போட்டிகள்)

- Advertisement -

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில் கடந்த 2013ஆம் ஆண்டு இதே ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இதே கொல்கத்தாவுக்கு எதிராக அறிமுகமான சஹால் அறிமுகப் போட்டியில் விக்கெட்டுகள் எதுவும் (0/34) எடுக்கவில்லை என்றாலும் நாளடைவில் பெங்களூரு அணிக்காக நிறைய வருடங்கள் விளையாடி இந்தியாவுக்காகவும் அறிமுகமாகி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக அசத்தி வருகிறார்.

அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்காக கடந்த வருடம் முதல் முறையாக விளையாடிய அவர் இதே கொல்கத்தாவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தினார். அத்துடன் தன்னுடைய சிறந்த பந்து வீச்சையும் (5/40) கொல்கத்தாவுக்கு எதிராகவே அவர் பதிவு செய்துள்ளார். அதுபோக ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தாவுக்கு எதிராக அதிக விக்கெட்களை எடுத்த பவுலர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: WTC Final : அவர செலக்ட் பண்ணாம கோப்பை ஜெயிக்கும் ட்ரிக்கை தேர்வுக்குழு மிஸ் பண்ணிட்டாங்க – கும்ப்ளே ஆதங்கம்

அப்படி தமக்கு மிகவும் பிடித்த கொல்கத்தாவுக்கு எதிரான இந்த போட்டியில் ஐபிஎல் வரலாற்றின் அதிக விக்கெட்கள் எடுத்த ஜாம்பவானாக சாதனை படைத்துள்ள அவர் அதிக சீசன்களில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை (5 முறை) எடுத்த வீரர் என்ற வரலாற்றையும் படைத்து ஊதா தொப்பியையும் தன்வசமாக்கியுள்ளார்.

Advertisement