
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் 17 வருடங்கள் கழித்து இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு நிகராக ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
ஏனெனில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் எல்லைப் பிரச்சினை காரணமாக ஐசிசி மற்றும் உலகக் கோப்பைகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. அதனால் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளின் மவுசு பன்மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும் அந்தளவுக்கு அழுத்தமான அந்தப் போட்டியில் பெரும்பாலும் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி வாகை சூடி வருகிறது என்றே சொல்லலாம்.
யுவராஜ் நம்பிக்கை:
குறிப்பாக டி20 உலகக் கோப்பையில் 2021 துபாய் தோல்வியை தவிர்த்து எஞ்சிய அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி கண்டுள்ளது. அதனால் உலகக் கோப்பையை வெல்கிறோமோ இல்லையோ எப்படியாவது இந்தியாவை தோற்கடித்து விட வேண்டும் என்பதே பெரும்பாலான பாகிஸ்தான் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது என்றால் மிகையாகாது.
இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் பற்றி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பேசியுள்ளார். மேலும் சமீபத்திய வருடங்களாகவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா அதிக வெற்றிகளை பெற்று முன்னிலையில் இருப்பதாகவும் அவர் பெருமை தெரிவித்துள்ளார். அதை இந்த வருடமும் இந்தியா தொடரும் என்று நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஐசிசி இணையத்தில் பேசியது பின்வருமாறு.
“அது உணர்வுகளின் போட்டியாகும். ஒருவேளை அதில் வென்றால் அதை நாங்கள் வெறித்தனமாக கொண்டாடுவோம். தோற்றாலும் பைத்தியக்காரத்தனமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். ஆனால் நாங்கள் வென்றால் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எங்களுடன் பைத்தியக்காரத்தனமாக மோதுவதற்கு வருவார்கள். அதே போல நாங்கள் தோல்வியை சந்தித்தாலும் அவர்கள் வருவார்கள். அது மட்டுமே வித்தியாசமாகும்”
இதையும் படிங்க: 140 கோடி இந்தியர்கள் நினைச்சா.. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்றுக் கொண்டீர்களா? கௌதம் கம்பீர் பதில்
“ஆனால் இந்தியா – பாகிஸ்தான் அல்லது எந்த போட்டியாக இருந்தாலும் வீரர்கள் தங்களின் 100% பங்களிப்பை கொடுப்பார்கள் என்று நான் உறுதியாக சொல்வேன். பொதுவாகவே இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் யார் போட்டி நாளன்று உணர்வுகளை கட்டுப்படுத்தி சூழ்நிலைகளில் கவனம் செலுத்துகிறார்களோ அவர்களே வெல்வார்கள். அந்த வகையில் கடந்த சில வருடங்களாகவே நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளோம். அதை இந்த வருடமும் நாங்கள் தொடர்வோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.