
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. அத்தொடருக்கு முன்பாக விராட், ரோஹித், அஸ்வின் உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வு பெற்றார்கள். அதனால் இந்திய அணி படுதோல்வியை சந்திக்கும் என்று பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கணித்தார்கள்.
ஆனால் சுப்மன் கில் தலைமையில் ஆரம்பம் முதலே அசத்திய இளம் இந்திய அணி தொடரை சமன் செய்தது. அந்த வெற்றியில் விளையாடிய அனைவருமே முக்கிய பங்காற்றி அசத்தினார்கள். குறிப்பாக லோயர் மிடில் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியின் வெற்றிகளுக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார்கள்.
அதிலும் குறிப்பாக மான்செஸ்டரில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது கில், ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி இந்திய அணியை தூக்கி நிறுத்தினர். அதை வீணடிக்காமல் நங்கூரமாக விளையாடிய ஜடேஜாவும் சுந்தரும் சதத்தை அடித்து தோல்வியிலிருந்து இந்தியாவை காப்பாற்றி முன்னிலைப்படுத்தி போட்டியை டிரா செய்ய வைத்தனர்.
அவர்களுடைய ஆட்டத்தால் அதிர்ந்த இங்கிலாந்து அணி இனிமேலும் இந்தியாவை தோற்கடிக்க முடியாது என்று கருதி கைகொடுக்க வந்ததை மறக்க முடியாது. இந்நிலையில் 2014, 2018, 2021 ஆகிய வருடங்களில் ஜடேஜா இங்கிலாந்தில் விளையாடியுள்ளார். ஆனால் முதல் முறையாக இங்கிலாந்தில் விளையாடிய சுந்தர் அனுபவமின்மையைத் தாண்டி வேற லெவலில் விளையாடியதாக ஜாம்பவான் யுவ்ராஜ் சிங் பாராட்டியுள்ளார்.
அதே போல சீனியர்கள் இல்லாமல் இளம் இந்திய அணி இங்கிலாந்தில் அசத்தியுள்ளது பற்றியும் அவர் பாராட்டியது பின்வருமாறு. “இந்தியா தொடரை சமன் செய்ததே அத்தொடரின் முக்கியமான தருணமாகும். சுந்தர் மற்றும் ஜடேஜா சதத்தை அடித்து போட்டியை டிரா செய்வது போன்ற நிகழ்வை நான் நீண்ட காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பார்க்கவில்லை. அது நம்முடைய பலத்தைப் பற்றி பேசுகிறது”
இதையும் படிங்க: இந்திய அணி ஜெய்ச்சுடாங்க.. சுப்மன் கில் அவங்களுக்கு நம்ப முடியாத பதிலடி கொடுத்துட்டாரு.. யுவி பாராட்டு
“ஜடேஜா நீண்ட காலமாக இந்திய அணியில் இருக்கிறார். ஆனால் சுந்தர் போன்ற இளம் வீரர் இந்திய அணிக்கு வந்து நம்ப முடியாத விஷயம் செய்துள்ளார் என்று நினைக்கிறேன். இளம் இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்லும் போது நிறைய அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தத்தையும் தாண்டி இளம் அணி தொடரை சமன் செய்துள்ளது சிறப்பானது. நீங்கள் விராட் அல்லது ரோகித் போன்ற வீரரின் இடத்தை நிரப்புகிறீர்கள். அது எளிதானது கிடையாது. ஆனால் நமது பையன்கள் தலை நிமிரும் வகையில் அசத்தியுள்ளனர்” என்று கூறினார்.