விராட் கோலிக்கு அன்பளிப்பாக ஒரு ஷூவையும் அதோடு ஒரு கடிதத்தையும் அளித்த யுவ்ராஜ் சிங் – எதுக்கு தெரியுமா?

Yuvi
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. லக்னோவில் துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியை தொடர்ந்து நடைபெறும் கடைசி 2 போட்டிகள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அழகான தர்மசாலா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது.

அதில் இந்தியாவின் அனுபவ நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் மார்ச் மாதம் துவங்க உள்ள 2 போட்டிகள் கொண்ட இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு அவர்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் திரும்ப உள்ளார்கள்.

- Advertisement -

விடைபெற்ற விராட் கோலி:
முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி பொறுப்பேற்றபோது 7வது இடத்தில் தத்தளித்த இந்தியாவை தனது ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார். மேலும் அவர் தலைமையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பல சரித்திர வெற்றிகளை இந்தியா பதிவு செய்து சாதனை படைத்தது.

அத்துடன் பொறுப்பேற்ற போது சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறக்கூடிய அணியாக இருந்த இந்தியாவை உலகின் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெரும் அணியாக மாற்றிய பெருமைக்குரியவர். மொத்தத்தில் 68 போட்டிகளில் 40 வெற்றிகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த விராட் கோலி கடந்த மாதம் திடீரென டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விடைபெற்றார்.

- Advertisement -

தரமான வீரர்:
டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்லாது கடந்த 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி தலைமையிலான இந்தியா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பல சரித்திர வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக டி20 போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய சவால் மிகுந்த 4 நாடுகளில் வரலாற்றிலேயே முதல் முறையாக டி20 தொடர்களை கேப்டனாக அவர் வென்று காட்டினார். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலக கோப்பையை தவிர ஏனைய அனைத்து தொடர்களிலும் விராட் கோலி தலைமையிலான இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இருந்தபோதிலும் கடந்த சில வருடங்களாகவே உலக கோப்பையை வாங்கி தரவில்லை என்ற விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த அவர் கடந்த மாதம் கேப்டன் பதவியில் இருந்து மொத்தமாக விலகினார். தற்போது ரோகித் சர்மா தலைமையில் மீண்டும் கடந்த 2016க்கு பின் சாதாரண வீரராக விளையாட துவங்கியுள்ள அவர் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் தனக்கென ஒரு தரமான முத்திரை பதித்துள்ளார் என்றே கூறலாம்.

- Advertisement -

தங்க காலணிகள்:
இந்நிலையில் சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ள விராட் கோலிக்கு நட்சத்திர முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தங்க காலணிகளை பரிசளித்துள்ளார். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “விராட், நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு நபராகவும் வளர்வதை நான் பார்த்திருக்கிறேன். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் தோளோடு தோள் நின்று நடக்கும் நிலையில் இருந்த அந்த இளம் பையனிலிருந்து இப்போது ஒரு புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒரு ஜாம்பவானாக உருவாகியுள்ளீர்கள்.

களத்தில் உங்களின் ஒழுக்கம் மற்றும் ஆர்வம் ஆகியவை இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு இளம் வீரர்களையும் பேட் எடுத்து ஒருநாள் நீல நிற ஜெர்சியில் இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்ற கனவைத் தூண்டுகிறது. ஒவ்வொரு வருடமும் நீங்கள் கிரிக்கெட்டின் நிலையை உயர்த்தியுள்ளீர்கள். மேலும் இந்த அற்புதமான விளையாட்டில் ஏற்கனவே நிறைய சாதித்து விட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்தை நீங்கள் தொடங்குவதைப் பார்ப்பது எனக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கிறது. நீங்கள் ஒரு மகத்தான கேப்டன் மற்றும் ஒரு அற்புதமான தலைவர். இந்த நிலையில் உங்களிடமிருந்து பல வரலாற்றுச் சிறப்புமிக்க ரன் சேசிங் இன்னிங்ஸ்களை எதிர்பார்க்கிறேன்” என உருக்கத்துடன் யுவராஜ்சிங் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சூப்பர் ஸ்டார் கிங் கோலி:
கடந்த 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலக கோப்பை ஆகிய ஆண்டுகளில் இந்தியா கோப்பையை முத்தமிட்ட போது அதில் ஆல்-ரவுண்டராக யுவராஜ் சிங் ஆற்றிய பங்கு அளப்பரியதாகும். இந்தியா கண்டெடுத்த ஒரு மகத்தான ஆல்-ரவுண்டராக விளங்கும் அவருடன் இணைந்து கடந்த 2008ஆம் ஆண்டு முதல் விராட் கோலி விளையாடி உள்ளார். பொதுவாகவே இந்திய அணியில் எம்எஸ் தோனி உள்ளிட்ட பலரும் விராட் கோலியை “சீக்க்கு” என செல்லமாக கூப்பிடுவார்கள். அதே பெயரை இந்த இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ள யுவராஜ் சிங் தங்க நிறத்துடன் கூடிய காலணிகளை பரிசளித்துள்ளார்.

இதையும் படிங்க : நாட்டுக்காக பர்ஸ்ட் நல்லா ஆடுங்க. அப்புறம் மும்பை இந்தியன்ஸ்க்கு ஆடலாம் – முன்னணி வீரரை விளாசிய ஆகாஷ்சோப்ரா

இது பற்றி அவர் மேலும் கூறியது பின்வருமாறு. “இந்திய அணிக்காக உங்களுடன் இணைந்து விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதைவிட ஜாலியாக சக வீரர்களின் காலை வாரியது, சாப்பாட்டில் ஏமாற்றியது, பஞ்சாப் பாடலுக்காக நடனமாடியது, உலக கோப்பையை வென்றது என பல்வேறு அம்சங்களை நாம் நண்பர்களாக இணைந்து செய்துள்ளோம். இந்த உலகிற்கு என்றுமே நீங்கள் கிங் கோலி. எப்போதும் உங்களுக்குள் வெற்றி பெற வேண்டும் என்ற நெருப்பு பற்றி எரியட்டும். நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதால் இதோ உங்களுக்காக ஒரு ஸ்பெஷலான தங்க காலணிகள். நமது நாட்டை தொடர்ந்து பெருமை படுத்துங்கள்” என பெருமையுடனும் உருக்கத்துடனும் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட்டில் இதுவரை விராட் கோலி செய்த சாதனைகளால் அவரை “கிங் கோலி” என ரசிகர்களும் முன்னாள் ஜாம்பவான்களும் அழைத்து வருகிறார்கள். அதேபோலவே யுவராஜ் சிங்கும் அவரை மனதார அழைத்துள்ளது விராட் கோலியின் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Advertisement