நாட்டுக்காக பர்ஸ்ட் நல்லா ஆடுங்க. அப்புறம் மும்பை இந்தியன்ஸ்க்கு ஆடலாம் – முன்னணி வீரரை விளாசிய ஆகாஷ்சோப்ரா

Chopra
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வந்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அதில் ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் பரிதாப தோல்வி அடைந்து நாடு திரும்பியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் படுமோசமாக செயல்பட்ட அந்த அணி 3 – 0 என்ற கணக்கில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக வைட்வாஷ் தோல்வியை சந்தித்தது.

INDvsWI

- Advertisement -

பொதுவாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் சமீப காலங்களாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சொதப்புவது சகஜமானது என அனைவருக்குமே தெரியும். ஆனால் டி20 என வந்து விட்டால் எப்போதுமே அதிரடி சரவெடியாக விளையாடி வெற்றியை பெறக்கூடிய ஒரு அணியாக வெஸ்ட் இண்டீஸ் கருதப்படுகிறது. ஏனெனில் அந்த அணியில் கிரண் பொல்லார்ட், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரான் என அதிரடியாக விளையாடக்கூடிய காட்டடி மன்னர்கள் காலம் காலமாக நிறைந்துள்ளார்கள்.

படுமோசமான தோல்வி:
அதன் காரணமாகவே வரலாற்றில் அதிக பட்சமாக 2 டி20 உலகக் கோப்பைகளை வென்றுள்ள மேற்கிந்திய தீவுகளில் இருந்து அதிகப்படியான அதிரடி வீரர்கள் ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் விளையாடி வருகிறார்கள். எனவே ஒருநாள் தொடரில் பெற்ற தோல்விக்கு டி20 தொடரில் வெற்றி பெற்று இந்தியாவை பழிவாங்க வெஸ்ட்இண்டீஸ் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

pollard 1

ஆனால் அதற்கு அப்படியே நேர்மாறாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டி20 தொடரிலும் படுமோசமாக செயல்பட்ட அந்த அணி அடுத்தடுத்த தோல்விகளைச் சந்தித்தது. பந்துவீச்சில் ஓரளவு சுமாராக செயல்பட்ட அந்த அணிக்கு பேட்டிங்கில் நிக்கோலஸ் பூரான் மட்டும் 3 போட்டிகளிலும் நிலைத்து நின்று தனி ஒருவனாக வெற்றிக்கு போராடினார். இருப்பினும் அந்த அணியின் கேப்டன் கிரண் பொல்லார்ட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ரன்கள் குவித்து தவறியதால் அந்த அணி கடைசி வரை ஒரு வெற்றியை கூட முடியவில்லை.

- Advertisement -

மும்பைக்கு மட்டும் நல்லா விளையாடுவார்:
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் கிரண் பொல்லார்ட் மிகச் சிறப்பாக விளையாடுகிறார் என இந்தியாவின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி தனது யூடியூப் அவர் பேசியது பின்வருமாறு. “விளையாடுவதற்கு ஆர்வம் இல்லாததை போல் பொல்லார்ட் காட்சியளிக்கிறார். பெரிய அளவில் பந்துவீசாத அவர் பேட்டிங்கிலும் அதே பழைய பொல்லார்ட்டாக இல்லை. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டும் மிகச் சிறப்பாக விளையாடக் கூடிய ஒருவராக அவர் தோன்றுகிறார்” என கூறியுள்ளார்.

chopra

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பல வருடங்களாக விளையாடி வரும் கிரண் பொல்லார்ட் அந்த அணியின் முக்கியமான முதுகெலும்பு வீரராக விளங்குகிறார். கடந்த காலங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி தோற்க இருந்த எத்தனையோ போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் பட்டையை கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்தி தனி ஒருவனாக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவரை ஐபிஎல் 2022 தொடருக்காக 6 கோடி ரூபாய்களுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் சற்றும் யோசிக்காமல் தக்கவைத்துள்ளது.

என்னாச்சு உங்களுக்கு:
அதன் காரணமாகவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு என வந்தால் பொல்லார்ட் மிகச்சிறப்பாக விளையாடுகிறார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு என வந்தால் சமீப காலங்களாக சொதப்புகிறார் என்று ஆகாஷ் சோப்ரா தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். அவர் கூறுவது போல இந்த டி20 தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்து சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இத்தனைக்கும் இந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட அவர் முழுமையாக பந்து வீசாமல் 3 போட்டிகளையும் சேர்த்து வெறும் ஒரு சில ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார்.

Pollard

அவரின் இந்த மோசமான செயல்பாடு பற்றி ஆகாஷ் சோப்ரா மேலும் தெரிவித்தது பின்வருமாறு. ” உண்மையை சொல்ல வேண்டுமெனில் வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாடும் போது அவரிடமுள்ள திறமைக்கு பாதியளவு வீரராக மட்டுமே காட்சியளிக்கிறார். இந்த தொடர் அல்லது டி20 உலக கோப்பை என எதுவாக இருந்தாலும் அவரின் செயல்பாடு இவ்வாறு தான் உள்ளது. மேலும் கேப்டனாக பீல்டிங்கை செட் செய்வது மற்றும் பந்து வீசுவது என அனைத்துமே அவ்வாறு தான் உள்ளது. அவரின் இந்த செயல்பாடுகள் அணியில் உள்ள வீரர்களுக்கு தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும் வகையில் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement