183 ரன்ஸ்.. வலுவான பாகிஸ்தானை வீழ்த்தி அப்செட் செய்த அயர்லாந்து.. 17 வருட சாதனை வெற்றி

- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த தொடரின் முதல் போட்டி மே பத்தாம் தேதி டப்லின் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 182/6 ரன்கள் அடித்தது.

அந்த அணிக்கு முகமது ரிஸ்வான் 1, அசாம் கான் 0, ஷடாப் கான் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் துவக்க வீரர் சாய்ம் ஆயுப் 45 (29) ரன்கள் அடுத்தது அசத்தினார். அவருடன் கேப்டன் பாபர் அசாம் மெதுவாக விளையாடி 57 (43) ரன்களை 132 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமே எடுத்தார். இருப்பினும் கடைசியில் இப்திகார் அகமது 37* (15) ஷாஹீன் அப்ரிடி 14* (8) ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

- Advertisement -

அசத்திய அயர்லாந்து:
அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக கிரைக் எங் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 183 ரன்களை துரத்திய அயர்லாந்து அணிக்கு ஆண்டி பால்பரின் ஆரம்ப முதலே நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். இருப்பினும் எதிர்புறம் பால் ஸ்டெர்லிங் 8, லார்கன் டுக்கர் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்ததாக வந்த ஹாரி டெக்டர் 36 (27), ஜார்ஜ் டாக்ரேல் 24 (12) ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.

அதை பயன்படுத்திய ஆண்டி பால்பிரின் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சவாலை கொடுத்து அரை சதமடித்து 10 பவுண்டரி 2 சிக்சருடன் 77 (55) ரன்கள் குவித்தார். அவரது ஆட்டத்தை வீணடிக்காத டிலானி 10* (6), குர்ட்டிஸ் கேம்பர் 15* (7) ரன்கள் அடித்து பினிஷிங் செய்தனர். அதனால் 19.5 ஓவரில் 183/5 ரன்கள் எடுத்த அயர்லாந்து 5 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

சொல்லப்போனால் இதன் வாயிலாக 17 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து சாதனை படைத்தது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக 2007 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த அயர்லாந்து தற்போது 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இப்படி ஒரு அற்புதமான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: 35 ரன்ஸ்.. கெத்து காட்டிய குஜராத்.. வாழ்வா – சாவா நிலையில் சொதப்பிய சிஎஸ்கே.. பிளே ஆஃப் கனவு நொறுங்கியதா?

அதன் காரணமாக 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள அந்த அணி சொந்த மண்ணில் இத்தொடரை வெல்வதற்கான வாய்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது. மறுபுறம் அவமான தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. குறிப்பாக மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அயர்லாந்திடம் மண்ணை கவ்வியுள்ளது.

Advertisement