ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மே பத்தாம் தேதி நடைபெற்ற 59வது லீக் போட்டியில் குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு கேப்டன் சுப்மன் கில் – சாய் சுதர்சன் ஆகியோர் ஆரம்பம் முதலே சுமாராக பந்து வீசிய சென்னை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் நேரம் செல்ல செல்ல 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்த இந்த ஜோடி சென்னை பவுலர்களை போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு பந்தாடியது. அதே வேகத்தில் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னையை முடித்த இந்த ஜோடியில் சாய் சுதர்சன் சதமடித்து 103 (51), கேப்டன் சுப்மன் கில் சதமடித்து 104 (55) ரன்கள் விளாசி அவுட்டானார்கள்.
சென்னை தோல்வி:
அதனால் ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாகவும் அவர்கள் சாதனை படைத்தனர். அவர்களுடைய அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவரில் குஜராத் 231/3 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக துஷார் தேஷ்பாண்டே பாண்டே 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 232 என்ற கடினமான இலக்கை துரத்திய சென்னைக்கு ஆரம்பத்திலேயே ரகானே 1 (5) ரன்னில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேப்டன் ருதுராஜ் டக் அவுட்டாகி சென்றார்.
போதாகுறைக்கு மறுபுறம் ரச்சின் ரவீந்திராவும் 1 (2) ரன்னில் அவுட்டானதால் 10/3 என சரிந்த சென்னை ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கியது. அப்போது ஜோடி சேர்ந்த மொய்ன் அலி – டேரில் மிட்சேல் ஆகியோர் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி 4வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து முழுமூச்சுடன் போராடினார்கள்.
இருப்பினும் சென்னையை ஓரளவு காப்பாற்றிய இந்த ஜோடியில் மிட்சேல் 63 (34), மொய்ன் அலி 56 (36) ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள். அப்போது ரன்ரேட் எகிறியதால் அடித்து நொறுக்க வேண்டிய அழுத்தத்தில் அடுத்ததாக வந்த சிவம் துபே 21 (13), ரவீந்திர ஜடேஜா 18 (10) ரன்களில் அவுட்டானார்கள். கடைசியில் எம்எஸ் தோனி 26* (11) ரன்கள் எடுத்த போராடியும் 20 ஓவரில் 196/8 ரன்கள் மட்டுமே அடுத்த சென்னை பரிதாபமாக தோற்றது.
இதையும் படிங்க: 231 ரன்ஸ்.. சிஎஸ்கேவை பிரித்து மேய்ந்த கில்.. சச்சினின் வாழ்நாள் சாதனையை உடைத்த சுதர்சன் புதிய சாதனை
அதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற குஜராத்துக்கு அதிகபட்சமாக மோஹித் சர்மா 3, ரஷித் தான் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றியால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை குஜராத் தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் தோல்வியை சந்தித்த சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வாழ்வா சாவா சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.