231 ரன்ஸ்.. சிஎஸ்கேவை பிரித்து மேய்ந்த கில்.. சச்சினின் வாழ்நாள் சாதனையை உடைத்த சுதர்சன் புதிய சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே பத்தாம் தேதி இரவு 7.30 மணிக்கு 59வது லீக் போட்டி நடைபெற்றது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் குஜராத்துக்கு எதிராக டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடினர்.

மறுபுறம் ஃபிளாட்டாக இருந்த பிட்ச்சில் சென்னை பவுலர்கள் வழக்கத்தை விட மோசமாக பந்து வீசினார்கள். அதைப் பயன்படுத்தி வெளுத்து வாங்கிய இந்த ஜோடியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலாவதாக 32 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு அசத்தினர். அவருடன் சேர்ந்து விளையாடிய கில் தம்முடைய பங்கிற்கு சென்னையை பந்தாடி 25 பந்துகளில் அரை சதமடித்தார்.

- Advertisement -

அபார சாதனை:
ஆனால் அப்போது கூட இந்த ஜோடியை பிரிக்க முடியாத அளவுக்கு சிஎஸ்கே பவுலர்கள் சுமாராகவே பந்து வீசினார்கள். அதை பயன்படுத்தி நேரம் செல்ல செல்ல 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் பட்டாசாக விளையாடிய இந்த ஜோடியில் கில் 50 பந்துகளில் 100 ரன்கள் தொட்டார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக சதமடித்த முதல் கேப்டனாகவும் அவர் சாதனை படைத்தார்.

அவருடன் சேர்ந்து மறுபுறம் தம்முடைய பங்கிற்கு வெளுத்து வாங்கிய சாய் சுதர்சன் 50 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு அட்டகாசம் செய்தார். குறிப்பாக 2023 ஐபிஎல் ஃபைனலில் தவறவிட்ட சதத்தை இந்த போட்டியில் சென்னைக்கு எதிராக அடித்த அவர் 5 பவுண்டரி 7 சிக்ஸருடன் 103 (51) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் அவர் 25 இன்னிங்ஸில் 1000 ரன்கள் கடந்துள்ளார்.

- Advertisement -

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்கள் அடித்த என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை உடைத்து அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தலா 31 இன்னிங்சில் 1000 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அசத்திய கில் 9 பவுண்டரி 6 சிக்ஸருடன் 104 (55) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இதையும் படிங்க: டி20 உலககோப்பையில் விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும்? – சவுரவ் கங்குலி பேட்டி

மேலும் 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற வரலாற்றையும் படைத்தது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கண்டிப்பாக குஜராத் 250 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கடைசியில் சென்னை ஓரளவு நன்றாக பந்து வீசியதால் 20 ஓவரில் குஜராத் 231/3 ரன்கள் எடுத்தது. சென்னைக்கு துசார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement