ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்வானார்கள்.
இருப்பினும் அந்த அணியில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு வீரர்கள் கூட தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல ஃபினிஷராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிங்கு சிங் ரிசர்வ் பட்டியலில் மட்டுமே சேர்க்கப்பட்டது பல முன்னாள் வீரர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஏனெனில் கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்த அவர் அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
காரணம் என்ன:
அதன் காரணமாக இந்தியாவுக்காக அறிமுகமான அவர் 2023 அயர்லாந்து தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தென்னாப்பிரிக்க தொடர், 2024 ஆப்கானிஸ்தான் தொடர்களில் சிறந்த ஃபினிஷராக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றினார். அதனால் தோனிக்கு பின் சிறந்த ஃபினிஷர் கிடைத்து விட்டார் என்று சில முன்னாள் வீரர்கள் அவரை பாராட்டினர். ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரை தேர்வுக் குழு கழற்றி விட்டுள்ளது.
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் கழற்றி விடும் அளவுக்கு ரிங்கு சிங் எந்த தவறையும் செய்யவில்லை என்று தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இருப்பினும் 15 பேர் கொண்ட அணியை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் துரதிஷ்டவசமாக அவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது மிகவும் கடினமான முடிவு”
“சுப்மன் கில்லும் அதே நிலையை சந்தித்தார். உங்களிடம் சிறப்பான விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். இருப்பினும் நாங்கள் கலவையை பார்க்க வேண்டியுள்ளது. இது துரதிஷ்டவசமானது. ரிங்கு சிங் எதையும் தவறாக செய்யவில்லை. அணியில் இடத்தை தவற விட்டது அவருடைய தவறில்லை. ஏற்கனவே 2 சிறப்பான விக்கெட் கீப்பர்கள் இருப்பதால் 15 வீரர்கள் பூர்த்தியாகினர்”
இதையும் படிங்க: சுமாரான ஃபார்மில் உள்ள பாண்டியா.. 2024 டி20 உ.கோ துணை கேப்டனாக தேர்வானாது ஏன்? அகர்கர் விளக்கம்
“எனவே மற்றொரு பவுலர் இருப்பது உதவியாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். இப்போதும் ரிங்கு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் உள்ளார். அந்தளவுக்கு நெருக்கமாக உள்ள அவருக்கு இது கொஞ்சம் கடினமாகும். இருப்பினும் நாளின் இறுதியில் உங்களால் 15 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்” என்று கூறினார். இதனால் ஏதேனும் ஒரு வீரர் காயத்தை சந்திக்கும் போது ரிங்கு உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.