ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அந்த நிலையில் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
குறிப்பாக உலகக் கோப்பைக்கு தயாராக இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து முன்கூட்டியே வெளியேறினார்கள். ஆனால் இந்திய வீரர்கள் மட்டும் 2024 ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு புறப்பட உள்ளனர். அதனால் வழக்கம் போல ஐபிஎல் காரணமாக இந்த வருடமும் முழுமையாக தயாராகாமலேயே உலகக் கோப்பையில் விளையாட வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.
பயிற்சி போட்டிகள்:
இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக உதவும் பயிற்சி போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. பொதுவாக ஒரு ஐசிசி தொடருக்கு முன்பாக அனைத்து அணிகளும் 2 பயிற்சி போட்டியில் விளையாடுவது வழக்கமாகும். ஆனால் இந்த முறை பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 அணிகள் மட்டும் பயிற்சி போட்டிகளில் விளையாடவில்லை.
ஏனெனில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மே 25 முதல் 30 வரை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. அதன் காரணமாக அந்த 2 அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடவில்லை. அதே போல் நியூசிலாந்து அணியும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியதால் இந்த பயிற்சி போட்டியில் விளையாட விரும்பவில்லை.
மற்ற படி மீதமுள்ள அனைத்து அணிகளும் மொத்தம் 16 பயிற்சி போட்டிகளில் விளையாடுகின்றன. அதில் இந்திய அணி வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால் அந்த ஒரு போட்டிக்கான மைதானத்தை மட்டும் ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: தோனி கண்டிப்பா அதை செய்யமாட்டாரு.. ஆர்சிபி பார்ட்டியை சிஎஸ்கே கலைச்சு விடுவாங்க.. உத்தப்பா அதிரடி கருத்து
இருப்பினும் ஜூன் 9ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அமெரிக்காவில் உள்ள நாஸாவ் கவுண்டி மைதானத்தில் விளையாட உள்ளன. எனவே அங்குள்ள கால சூழ்நிலைகளை தெரிந்துகொள்ளும் வகையில் அந்த மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பயிற்சி போட்டியில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு நேரடியாக உலகக் கோப்பையில் களமிறங்க உள்ள இந்திய அணிக்கு இந்த பயிற்சி போட்டி அமெரிக்காவின் சூழ்நிலைகளை தெரிந்து கொள்வதற்கு உதவும் என்று நம்பலாம்.



