
இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங் கடந்த 2000-ஆவது ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2017-ஆம் ஆண்டு வரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் போட்டிகளிலும் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை 132 போட்டிகளில் விளையாடியுள்ளார். நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளையாடிய யுவ்ராஜ் சிங் 2007 டி20 உலக கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றில் இந்திய அணி வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.
இருந்தாலும் கடந்த 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் ஓய்வு முடிவை அறிவித்தார். அதோடு கடந்த 2019-ஆம் ஆண்டு பிறகு ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்த யுவ்ராஜ் சிங் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது ரசிகர் மத்தியிலும் அப்போது ஏமாற்றத்தை அளித்திருந்தது.
அதனை தொடர்ந்து தனது மகனின் கரியர் குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த அவரது தந்தை யோக்ராஜ் சிங் எம்.எஸ். தோனி தான் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டார். தோனி மட்டும் கேப்டனாக இல்லாமல் இருந்தால் யுவராஜ் சிங் இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடி இருப்பார் என்றும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் மாறியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தார்.
அதே போன்று கடந்த 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் கபில் தேவை தான் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ள முயன்றதாகவும் ஒரு தகவலை வெளிப்படுத்தியிருந்தார். அதோடு 1980 ஆம் ஆண்டு தனக்கும் கபில் தேவுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாகவே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனது என்றும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
இப்படி தொடர்ச்சியாக கபில் தேவ் மற்றும் மஹேந்திர தோனி ஆகியோரை யோக்ராஜ் சிங் தாக்கி பேசிவந்தது ரசிகர்கள் மத்தியிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அது குறித்து எப்போதுமே யுவ்ராஜ் சிங் எந்த ஒரு பதிலையும் வெளிப்படுத்தியதில்லை. ஆனால் தற்போது ஒரு பிரத்தியேக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யுவ்ராஜ் சிங் தனது தந்தையின் கருத்துகளுக்காக முன்னாள் கேப்டனாக தோனி மற்றும் கபில் தேவ் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதையும் படிங்க : 14 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. கே.கே.ஆர் அணி சந்தித்த மோசமான துவக்கம் – விவரம் இதோ
இதுகுறித்து பேசிய யுவ்ராஜ் சிங் கூறுகையில் : எனது தந்தை கூறும் இதுபோன்ற கருத்துகளை நான் எப்போதும் ஆதரிக்கவில்லை. அவர் கூறிய கருத்துக்களில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. எனவே கபில் தேவ் மற்றும் எம்.எஸ் தோனி ஆகியோரிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அந்த நேரலையில் அவர் உருக்கமான சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.