- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஃபிளிண்டாப் வம்புக்கு பலிகிடாவான ப்ராட்.. 6 சிக்ஸ்.. ருத்ரதாண்டவம் ஆடிய யுவ்ராஜ் சிங்.. டி20 உ.கோ ரீவைண்ட்

ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விரைவில் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி களமிறங்குகிறது. கடந்த 2007 முதல் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்தியா சில மகத்தான வெற்றிகளை பதிவு செய்து ரசிகர்களுக்கு நீங்காத நினைவுகளை கொடுத்துள்ளது.

அதில் 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவ்ராஜ் சிங்கின் ருத்ரதாண்டவத்தால் இந்தியா பதிவு செய்த வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த உலகத்தாலும் மறக்க முடியாது. ஏனெனில் அந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானை பவுல் அவுட் முறையில் வீழ்த்திய அதே டர்பன் மைதானத்தில் 2007 செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடியது.

- Advertisement -

யுவ்ராஜ் ருத்ரதாண்டவம்:
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கௌதம் கம்பீர் 58, வீரேந்திர சேவாக் 68 ரன்கள் விளாசி 136 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கம் கொடுத்தனர். அப்போது வந்த யுவராஜ் சிங் ஆரம்பத்திலேயே ஆண்ட்ரூ பிளின்ஃடாப்க்கு எதிராக சில பவுண்டரிகளை பறக்க விட்டு அதிரடியை துவங்கினார்.

அதனால் வெறுப்பான பிளின்ஃடாப் வேண்டுமென்றே அவரிடம் சில வார்த்தைகளை சொல்லி வம்பிழுத்தார். அதனால் சூடான யுவ்ராஜ் சிங் அடுத்த ஓவரில் ஸ்டுர்ட் ப்ராடுக்கு எதிராக 111 மீட்டர் சிக்சரைப் பறக்க விட்டு பதிலடி கொடுத்தார். அதோடு நிற்காத அவர் 2வது பந்தில் கௌ கார்னர், 3வது பந்தில் எக்ஸ்ட்ரா கவர், 4வது பந்தில் பேக்வேர்ட் பாய்ண்ட், 5வது பந்தில் மிட் விக்கெட், 6வது பந்தில் மிட் ஆன் என மைதானத்தின் 360 டிகிரியிலும் அடுத்தடுத்து 6 சிக்சர்களை தெறிக்க விட்டு வரலாறு படைத்தார்.

- Advertisement -

அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் டி20 உலகக் கோப்பையிலும் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற இரட்டை உலக சாதனையை யுவராஜ் படைத்தார். அத்துடன் 12 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் டி20 உலகக் கோப்பையிலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் வேகமாக அரை சதமடித்த வீரர் என்ற மற்றொரு இரட்டை உலக சாதனையை படைத்தார். ரவி சாஸ்திரி வர்ணனையில் டர்பன் நகரில் அன்று யுவராஜ் நிகழ்த்திய தீபாவளி சரவெடியை இப்போது நினைத்தாலும் ரசிகர்களுக்கு புல்லரிக்கும்.

மறுபுறம் எப்படி போட்டாலும் அடிக்கிறாரே என்ற வகையில் வாய் மீது கை வைத்து திகைத்து நின்ற ஸ்டுர்ட் ப்ராட் தேவையின்றி ஆண்ட்ரூ ஃபிளின்டாப் வம்பிழுத்ததற்காக யுவராஜ் சிங் கோபத்திற்கு பலிக்கிடாவானார் என்றே சொல்லலாம். அந்த வகையில் ஃபிளிண்டாப்க்கு காலத்திற்கும் மறக்க முடியாத மாஸ் பதிலடி கொடுத்த யுவராஜ் சிங் 58 (16) ரன்கள் குவித்ததால் இந்தியா 219 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதையும் படிங்க: டி20 உ.கோ 2024 : இந்தியா – இங்கிலாந்து அணிகளின் பலம், பலவீனம் என்ன? புள்ளி விவரத்தோடு ஒரு அலசல்

அதை சேசிங் செய்த இங்கிலாந்து முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 200/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக இர்பான் பதான் 3, ஆர்பி சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். நாளடைவில் அந்தப் போட்டியில் “உன்னுடைய தொண்டையை அறுத்து விடுவேன்” என்று ஃபிளிண்டாப் சொன்ன வார்த்தைகளால் கோபமடைந்து 6 சிக்ஸர்கள் அடித்ததாக யுவராஜ் சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -