நம்ம தினேஷ் கார்த்திக்கை போல எதிரணிக்கு டஃப் கொடுக்கும் இளம் வீரர், குவியும் பாராட்டு – யாருப்பா அது?

Jitesh Sharma
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பையை பதம் பார்க்க பஞ்சாப் 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதன் காரணமாக இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெற்றி நடைபோடுகிறது. மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த மும்பை ஏற்கனவே தனது 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்திருந்த நிலையில் இந்த தோல்வியால் தொடர்ச்சியாக 5-வது தோல்வியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் திண்டாடி வருவது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அதிரடியாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 198/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிரடியாக பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓபனிங் ஜோடியில் கேப்டன் மயங்க் அகர்வால் 52 (32) ரன்களும் ஷிகர் தவான் 70 (50) ரன்களும் விளாசினார்.

- Advertisement -

மும்பை பரிதாபம்:
அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 28 (17), இஷான் கிசான் 3 (6) என குறைந்த ரன்களை எடுத்து சுமாரான தொடக்கத்தை கொடுத்ததால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும் அதன் பின் களமிறங்கிய இளம் வீரர்கள் தேவால்ட் ப்ரேவிஸ் அதிரடியாக 49 (25) ரன்களும் திலக் வர்மா 36 (20) ரன்களும் எடுத்து 4-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு தங்களது அணியை காப்பாற்றினர்.

அந்த நிலையில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் பொல்லார்டு 10 (11) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்ற கடைசி நேரத்தில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து போராடிய போதிலும் தனது அணியை காப்பாற்ற முடியவில்லை. இதனால் 20 ஓவர்களில் 189/9 ரன்களை மட்டுமே எடுத்த மும்பை பரிதாபமாக தோல்வி அடைந்தது. பஞ்சாப் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய ஓடின் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும் ரபாடா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

கவனம் ஈர்க்கும் ஜிதேஷ்:
முன்னதாக இந்த போட்டியில் பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்த போது கேப்டன் மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அதிரடியாக பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதிலும் ஷிகர் தவான் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அடுத்தடுத்து அரைசதம் அடித்ததால் 130/3 என்ற நல்ல நிலைமையில் பஞ்சாப் விளையாடிக்கொண்டிருந்தது.

அப்போது களமிறங்கிய இளம் இந்திய வீரர் ஜிதேஷ் சர்மா ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடி வெறும் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் 30* ரன்களை 200.00 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் சூப்பரான பினிஷிங் கொடுத்தார். அவரின் அந்த கடைசி கட்ட 30 ரன்கள் தான் இறுதியில் பஞ்சாப்க்கு 12 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிக்கு வித்திட்டது.

- Advertisement -

கார்த்திக்கை போல:
இது மட்டுமல்லாமல் இந்த வருடம் பஞ்சாப் விளையாடிய 5 போட்டிகளில் அவருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தாலும் அந்த 3 போட்டிகளிலும் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜிதேஷ் சர்மா ஒரு பினிசரை போல அற்புதமாக செயல்பட்டார். அதிலும் முதல் போட்டியில் 3 சிக்சர் உட்பட 17 பந்துகளில் 26 ரன்களும், 2-வது போட்டியில் 1 பவுண்டரி 2 சிக்சர் உட்பட 11 பந்துகளில் 23 ரன்களும், நேற்றைய போட்டியில் 30 * (15) ரன்களும் எடுத்து பஞ்சாப் வெற்றியில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இவரை பார்க்கும் போது இதே ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக மாஸ் பினிசெராக செயல்பட்டு வரும் தமிழக நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் ஞாபகம் தான் பல ரசிகர்களுக்கும் வருகிறது. ஏனெனில் அவர் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளில் முறையே 32* (14), 14* (7), 44* (23), 7* (2), 34 (14) என எதிரணிகளை தெறிக்கவிடும் பினிசராக பெங்களூரின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

இதையும் படிங்க : சொன்னதை செய்யல. அவரை டீம்ல இருந்து தூக்கிடலாமா? – தோனியின் பேச்சால் பரபரப்பான சி.எஸ்.கே மீட்டிங்

அந்த நிலையில் அவரளவுக்கு இல்லை என்றாலும் தம்மால் முடிந்த அளவுக்கு கிடைத்த வாய்ப்பில் அவரைப் போலவே செயல்பட்டு வரும் இவர் வரும் காலங்களில் பெரிய அளவில் வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும். விதர்பாவை சேர்ந்த 28 வயது நிரம்பிய இவரை வெறும் 20 லட்சத்துக்கு ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. அந்த வகையில் குறைந்த விலையாக இருந்தாலும் தனது அபார திறமையால் பஞ்சாப் கிங்ஸ் அணியில் வெற்றிகளில் இவர் பங்காற்றி வருவது பாராட்டுக்குரியதாகும்.

Advertisement