அவரை ரொம்ப காலம் தடுத்து நிறுத்த முடியாது, பேசாம ராகுலை ட்ராப் பண்ணுங்க – இளம் வீரருக்காக முகமத் கைஃப் கோரிக்கை

Kaif-and-Rohit-Dravid
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் அசத்திய இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. முன்னதாக அப்போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதில் வாய்ப்பு பெற்ற இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் அதை பொன்னாக மாற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதமடித்து அசத்தினார்.

Shubman Gill Century

- Advertisement -

இந்தியா வென்ற 2018 அண்டர்-19 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் சுமாரான செயல்பாடுகள் மற்றும் காயத்தால் வெளியேறிய நிலையில் 2021ஆம் ஆண்டு இந்தியா பதிவு செய்த வரலாற்று சிறப்புமிக்க காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார். அதன் பின் மீண்டும் காயம் மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் வந்ததால் வாய்ப்பை இழந்த அவர் 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் அதிக ரன்கள் குவித்து முதல் வருடத்திலேயே கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றியதால் மீண்டும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார்.

நிறுத்த முடியாது:
அதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் முதல் முறையாக சதமடித்து அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதுகளை வென்று இந்தியாவின் அடுத்தடுத்த வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடித்துள்ளார். அந்த வகையில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தப்போகும் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அறியப்படும் அவருக்கு 2வது போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா திரும்புவார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளதால் சதமடித்தும் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rohit-Rahul-and-Gill

இந்நிலையில் அவரைப் போன்ற தரமான வீரரை நீண்ட நாட்கள் தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவிக்க முன்னாள் வீரர் முகமது கைஃப் வேண்டுமானால் சுமாராக செயல்படும் கேஎல் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களை நீக்கி விட்டு வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியா பின்பற்றும் அணுகு முறையை வைத்து இது கடினமான முடிவாகும். ஏனெனில் இந்திய அணி 5 பவுலர்களை பயன்படுத்துகிறது. ஒருவேளை நீங்கள் 4 பவுலர்களை வைத்து விளையாடியிருந்தால் அவருக்கான இடத்தை அட்ஜஸ்ட் செய்திருக்கலாம்”

- Advertisement -

“ஆனால் தற்போதைய நிலைமையில் அவருக்கான இடம் பொருத்தமாக இல்லை. எனவே ரோகித் சர்மா திரும்ப வருவதால் அவர் தமது நேரத்திற்காக காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஒருவேளை நான் சுப்மன் கில்லாக இருந்தால் அணியில் எனக்கான இடத்தைப் பற்றி கவலைப்பட மாட்டேன். ஏனெனில் நான் ஏற்கனவே இடம் பிடிப்பதற்கான வேலையை செய்து விட்டேன். அதனால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அவர் விளையாடுவதை இனிமேல் யாராலும் தடுக்க முடியாது”

Kaif

“நல்ல டெக்னிக் கொண்டுள்ள சுப்மன் கில் தொடர்ச்சியாக பசியுடன் ரன்களை குவிக்கிறார். ஐபிஎல் தொடரிலும் ரன்களை குவித்த அவர் குஜராத் அணி கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். அத்துடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சதமடித்துள்ள அவர் 2022இல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். என்னைப் பொறுத்த வரை அவரைப் போன்ற வீரர்களை நீங்கள் நீண்ட காலம் தடுத்து நிறுத்த முடியாது.

இதையும் படிங்க: அவரோட மதிப்பு தெரியாம பேசாதீங்க. சைலன்ட்டா எவ்ளோ பண்ணிட்டு வராரு – இந்திய பவுலரை பாராட்டிய அகார்கர்

“அதனால் நீங்கள் கேஎல் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் போன்றவர்களை நீக்கி விட்டு அவருக்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். ஏனெனில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் தன்னை முன்னேற்றிக் கொண்டு அசத்தி வருகிறார். மேலும் 2வது போட்டி 3 நாள் இடைவெளியில் நடைபெறுவதால் அதில் ரோகித் சர்மா வராமல் போனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கலாம்” என்று கூறினார்.

Advertisement