இந்தியாவைச் சேர்ந்த 21 வயது இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தவே ஐபிஎல் தொடரில் கடந்த 2020-ஆம் ஆண்டு அறிமுகமாகினார். ஆனாலும் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரானது அவருக்கு மிகவும் அற்புதமாக அமைந்தது என்றே கூறலாம். ஏனெனில் நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் ஐந்து அரைசதம் மற்றும் ஒரு சதம் என 625 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரில் அசத்தியதோடு மட்டுமின்றி உள்ளூர் கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்துவரும அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
புஜாரா டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவரது இடத்தில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் தற்போது வெஸ்ட் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் துலீப் டிராபி தொடரின் போது அவர் எதிரணி வீரரை ஸ்லெட்ஜிங் செய்தது குறித்து தற்போது பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : களத்தில் எல்லோருமே சற்று ஆக்ரோஷமாக செயல்படுவது சகஜம் தான். நானும் களத்தில் வெற்றிக்கான வெறியோடு போராடுவதையே முக்கியமாக பார்க்கிறேன். ஆக்ரோஷமான கிரிக்கெட் விளையாடினால் தான் உத்வேகம் இருக்கும். துலீப் டிராபியின் போது ரவி தேஜாவை நான் அதிகமாக ஸ்லெட்ஜிங் செய்யவில்லை.
என்னுடைய கட்டுப்பாட்டில் சரியான அளவில் தான் ஸ்லெட்ஜிங் செய்தேன். இருந்தாலும் எவர் ஒருவரும் எனது தாய் பற்றியோ, சகோதரி பற்றியோ பேசினால் என்னால் அமைதியாக இருக்க முடியாது என ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஆஷஸ் விட இந்தியா – பாகிஸ்தான் தான் பெருசு, அவங்க உழைப்புக்கு மதிப்பு கொடுங்க – ஐசிசி’க்கு கிறிஸ் கெயில் கோரிக்கை
கடந்த பல மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற துலீப் டிராபி தொடரின் போது எதிரணி வீரரை ஜெய்ஸ்வால் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்து கொண்டிருந்ததால் அந்த அணியின் கேப்டனாக இருந்த ரகானே அவரை மைதானத்தில் இருந்து வெளியேற்றிய சம்பவம் அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.