
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக இருக்கும் இந்தியா இருதரப்பு தொடர்களின் சிறப்பாக செயல்பட்டு நம்பர் ஒன் இடத்தை பிடித்தாலும் கடந்த 10 வருடமாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க ரோஹித் சர்மா தலைமையிலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் படுதோல்வியை சந்தித்தது. அதனால் இளம் அணியை உருவாக்குவதற்கான நேரம் வந்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் பிசிசிஐயும் 2024 டி20 உலக கோப்பையை கருத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை உருவாக்கும் வேலையை தொடங்கியுள்ளது.
அந்த பயணத்தில் 2022 டி20 முடிந்தது முதல் ரோகித் சர்மா விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு நிறைய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் டி20 தொடரில் யசஸ்வி ஜெயிஸ்வால், திலக் வர்மா போன்ற சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுக்கு முதல் முறையாக தேர்வுக்குழு வாய்ப்பு கொடுத்துள்ளது. இருப்பினும் அந்தத் தொடரில் ரிங்கு சிங் இடம் பெறாதது நிறைய ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிருப்தியில் வாழ்த்தியது.
கம்பீரின் கருத்து:
ஏனெனில் கடந்த வருடம் சிறப்பாக செயல்பட்டு இந்த வருடம் முழுமையான வாய்ப்பு பெற்று 14 போட்டிகளில் 474 ரன்களை 149.53 என்ற சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த ரிங்கு சிங் அழுத்தமான லோயர் மிடில் ஆர்டரில் மிகச்சிறந்த ஃபினிஷராக குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் 2024 டி20 உலக கோப்பையில் ஃபினிஷராக வாய்ப்பளித்து வளர்க்க வேண்டும் என்று நிறைய கோரிக்கைகள் எழுந்த காரணத்தால் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ரிங்கு சிங் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் ஒரு வருடத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட சீசன்களில் அசத்தாமல் அவசரப்பட்டு ரிங்குவை தேர்வு செய்து விடக்கூடாது என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் 2024 டி20 உலகக்கோப்பையில் யசஸ்வி ஜெய்ஸ்வால் கண்டிப்பாக விளையாட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் ஐபிஎல் தொடரில் 2020 முதலே ஓரளவு சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்த வருடம் உச்சகட்டமாக 625 ரன்கள் விளாசி சாதனை படைத்ததுடன் ரஞ்சி, விஜய் ஹசாரே ஆகிய உள்ளூர் தொடர்களில் இரட்டை சதங்களை அடித்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவிக்கும் கம்பீர இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.
“இந்தியாவில் 2 மாதங்கள் மட்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் அசத்துபவர்களை நாம் உடனடியாக இந்திய அணியில் தேர்வு செய்யும் பிரச்சனை இருக்கிறது. ஆனால் முதல் தரம் மற்றும் லிஸ்ட் ஏ ஆகிய உள்ளூர் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் இரட்டை சதங்களை அடித்துள்ளார். அதன் உச்சகட்டமாகவே ஐபிஎல் 2023 தொடரில் அவருடைய செயல்பாடுகள் இருந்தது. எனவே அவர் அடுத்ததாக நடைபெறும் டி20 உலகக் கோப்பை நிச்சயமாக தேர்வு செய்யப்பட வேண்டும். அதே போல சிறப்பாக செயல்பட்டு வரும் ரிங்கு சிங் கதையும் உத்வேகத்தை கொடுப்பதாக இருக்கிறது”
இதையும் படிங்க:ரிக்கி பாண்டிங்கின் ஒரிஜினல் காப்பி போலவே இருக்கும் விளையாட்டு வீரர் கண்டுபிடிப்பு – ரசிர்கள் வியப்பு, கலாய்த்த யுவ்ராஜ் சிங்
“ஆனால் ஒரு சீசன் மட்டும் அடிப்படையாக வைத்து யாரையும் தேர்வு செய்ய கூடாது. அதனால் ரிங்குவை உள்ளூர் தொடரில் ரன்களை அடித்து பின்னர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட விடுங்கள். ஒருவேளை அவர் அந்த தொடர்ச்சியான ஆட்டங்களில் பெரிய ரன்களை எடுத்தால் இந்தியாவுக்கு தேர்வு செய்யலாம்” என்று கூறினார். அவர் கூறுவது போல சமீப காலங்களில் நிறைய வீரர்கள் ஒரு சீசனில் அசத்தினார்கள் என்பதற்காக உடனடியாக தேர்வு செய்யப்பட்டாலும் அழுத்தமான சர்வதேச கிரிக்கெட்டில் சுமாராக செயல்பட்டு வெளியேறினார்கள். எனவே தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்வதே சிறந்த முடிவாக இருக்கும் என்றே
சொல்லலாம்.