ஆஸ்திரேலியாவை நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் வரலாறு கண்ட மகத்தான கேப்டன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். கடந்த 1995இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், பிரையன் லாரா போன்ற மகத்தான வீரர்களுக்கு நிகராக 168 டெஸ்ட் போட்டிகளில் 13378 ரன்களும் 375 ஒருநாள் போட்டிகளில் 13704 ரன்களும் எடுத்து சர்வதேச அளவில் அதிக ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அடிக்கும் அவருடைய ஃபுல் ஷாட் உலக அளவில் மிகவும் பிரபலமானதாக பார்க்கப்படுகிறது.
அதை விட மகத்தான கேப்டனாக போற்றப்படும் ஸ்டீவ் வாக்கிற்கு பின்பு வழி நடத்தும் பொறுப்பை பெற்ற அவர் கில்கிறிஸ்ட், ஹெய்டன், ஷேன் வார்னே, மெக்ராத் என தமக்கு கிடைத்த தரத்தினும் தரமான வீரர்களை வைத்து உலகையே மிரட்டும் வலுவான அணியாக ஆஸ்திரேலியாவை மாற்றி 2003, 2007 ஆகிய அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை வென்ற கேப்டனாக சரித்திரம் படைத்தார். அத்துடன் தோனி போன்ற எத்தனை பேர் வந்தாலும் எளிதில் முறியடிக்க முடியாத அளவுக்கு 220 வெற்றிகளை குவித்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார்.
பாண்டிங் போலவே:
அந்த வகையில் ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் இந்தியா போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் ரசிகர்களை கொண்டுள்ள அவர் ஓய்வுக்கு பின் வர்ணனையாளராகவும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். பொதுவாக உலகில் ஒருவரை போலவே 7 பேர் இருப்பார்கள் என்று பேச்சு வாக்கில் சொல்வதை நமது வாழ்வில் பார்த்திருக்க முடியும். அதற்கு எடுத்துக்காட்டாக ரிக்கி பாண்டிங் போலவே அமெரிக்காவை சேர்ந்த கோல்ஃப் விளையாட்டு வீரர் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஆம் அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயதாகும் ஹர்மன் பிரைன் என்ற பெயருடைய அவர் கோல்ஃப் விளையாட்டின் உயரிய தொடரான 16வது பிஜிஏ பயணத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தை பிடித்து கோப்பையைக் வென்றுள்ளார். அதை பிஜிஏ விளையாட்டு தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளதை பார்த்த பெரும்பாலான ரசிகர்களுக்கு முதல் பார்வையிலேயே அவர் அச்சு அசலாக ரிக்கி பாண்டிங் போல இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது.
சரி எதற்கும் சிரித்த முகத்துடன் கோபியை கையில் வைத்துக் கொண்டு நிற்கும் அவருடைய புகைப்படத்தை உற்றுப் பார்ப்போம் என்று பெரிதுபடுத்தி பார்த்தாலும் இளம் வயதில் ரிக்கி பாண்டிங் எப்படி இருந்தாரோ அதே போன்ற உருவமே தெரிகிறது. அதனால் ஆச்சரியமடையும் ரசிகர்கள் உலகில் ரிக்கி பாண்டிங் போல இருக்கும் 2வது நபரை கண்டுபிடித்து விட்டதாக கலகலப்பை வெளிப்படுத்துகின்றனர்.
அதன் உச்சமாக முன்னாள் இங்கிலாந்து வீராங்கனை ஈஷா குகா இந்த கோப்பையை வென்றதற்கு வாழ்த்துக்கள் என்று ட்விட்டரில் வெளிப்படையாகவே பாராட்டியுள்ளார். அதைப் பார்த்த முன்னாள் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் சிறப்பாக விளையாடினீர்கள் பண்டர் என ரிக்கி பாண்டிங்கின் பட்டப் பெயரை அழைத்து கலாய்க்கும் வகையில் பாராட்டியுள்ளார். மேலும் கிரிக்கெட்டுக்கு பின் சிறப்பான விளையாட்டை விளையாடி வருகிறீர்கள் என்று நிறைய ரசிகர்களும் ரிக்கி பாண்டிங்கை டேக் செய்து கலாய்க்கும் வகையில் வியப்பை வெளிப்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க:வீடியோ : அச்சு அசலாக மலிங்காவை போன்றே பந்துவீசி அசத்தும் அவரது மகன் டுவின் மலிங்கா – அமெரிக்காவில் பயிற்சி
இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்டு வருகிறார். அதில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் மிகவும் கௌரவமிக்க ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.