இலங்கை அணியின் முன்னாள் வீரரான லாசித் மலிங்கா கடந்த 2004-ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2020-ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 16 வருடங்கள் 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இலங்கை அணிக்காக 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய பெரிய பேட்ஸ்மன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர்.
அதேபோன்று ஐபிஎல் தொடரிலும் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 122 போட்டிகளில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் பந்துவீச்சு துறைக்கு முதுகெலும்பாய் இருந்து வந்தார். மும்பை அணி ஐந்து முறை கோப்பையை வென்ற போதும் அணியில் இருந்த வீரராகவும் மலிங்கா திகழ்கிறார்.
பின்னர் 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் தற்போது பயிற்சியாளராக புதிய அவதாரம் எடுத்து பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் ஐபிஎல் தொடரின் போது ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட அவர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சொந்தமான நியூயார்க் அணிக்காக பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்த தொடருக்காக அமெரிக்கா சென்றுள்ள அவருடன் மலிங்காவின் மகனான டுவின் மலிங்காவும் உடன் சென்றுள்ளார். அங்கு நியூயார்க் அணி வீரர்களுக்கு அவர் பயிற்சி அளித்து கொண்டிருக்கும் வேளையில் அவரது மகன் டுவின் மலிங்கா அவரைப் போன்று அச்சசலாக பந்து வீசும் பயிற்சி வீடியோ ஒன்றினை எம்.ஐ நியூயார்க் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில் பந்துவீசும் தன் மகனை பார்த்து : ஆக்சன் எல்லாம் ஒழுங்காக வருகிறது. சரியான வேகத்துடன் நேராக பந்துவீச தொடங்கினால் இன்னும் திறனை மேம்படுத்தலாம் என்று கூறுகிறார்.
இதையும் படிங்க : IND vs WI : பால் டர்ன் ஆகுது, மழை இல்லைனா அவர் ஒருத்தரே வெ.இ அணியை சுருட்டிருவாரு – சீனியர் மீது சிராஜ் நம்பிக்கை
அவர் அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே டுவின் மலிங்கா வீசும் பந்து ஸ்டம்பை தட்டி செல்கிறது. இப்படி டுவின் மலிங்கா தந்தையை போன்றே பந்துவீசும் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமின்றி மும்பைக்கு அடுத்த மலிங்கா ரெடி என ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.