322 ரன்ஸ்.. 3வது நாளில் ஆட்டத்தை மாற்றி பாதியிலேயே வெளியேறிய ஜெய்ஸ்வால்.. மீண்டும் பேட்டிங் செய்வாரா?

Yashasvi Jaiswal 44
- Advertisement -

பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 15, ஓலி போப் 39 ரன்களில் அவுட்டானாலும் பென் டக்கெட் இந்திய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 88 பந்துகளில் சதமடித்து மொத்தம் 153 (151) ரன்கள் விளாசி தெறிக்க விட்டார். ஆனால் அவருடைய அதிரடியால் ஒரு கட்டத்தில் 224/2 என்ற நிலையில் இருந்த இங்கிலாந்தை அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை எடுத்து மடக்கிப் பிடித்த இந்தியா 319 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

- Advertisement -

அசத்திய ஜெய்ஸ்வால்:
அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் பின் 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களில் ஜோ ரூட் சுழலில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் வந்த சுப்மன் கில் மெதுவாக விளையாடினர்.

ஆனால் அந்த ஜோடியில் முதல் 73 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்த ஜெய்ஸ்வால் ஒரு கட்டத்திற்கு பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த 49 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அபாரமான சதமடித்தார். குறிப்பாக 49 பந்துகளில் இருந்த போது சிக்சருடன் 50 ரன்கள் தொட்ட அவர் 96 ரன்களில் இருந்த போது பவுண்டரியுடன் சேவாக் போல சதத்தை விளாசி இந்தியா 300 ரன்கள் முன்னிலை தாண்டுவதற்கு உதவினார்.

- Advertisement -

இருப்பினும் நாள் முழுவதும் ஃபீல்டிங் செய்து பின்னர் வேகமாக விளையாடியதால் மூன்றாவது நாள் மாலை வேளையில் தசைப்பிடிப்பு காயத்தை சந்தித்த அவர் மேற்கொண்டு விளையாட முடியாமல் அவதிப்பட்டார். அதற்காக முதலுதவி எடுத்தும் சீரான நிலமை வராததால் காயம் பெரிதாகி விடக்கூடாது என்று கருதிய ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி 5 சிக்சருடன் 104* (133) ரன்களில் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் சென்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இதையும் படிங்க: 9 ஃபோர்ஸ் 5 சிக்ஸ்.. 49 பந்தில் 75 ரன்ஸ்.. மீண்டும் சேவாக் போல பயமின்றி இங்கிலாந்தை சிதறடித்த ஜெய்ஸ்வால்

இங்கே ரிட்டையர் அவுட் முறையில் வெளியேறவில்லை என்பதால் நாளை தேவைப்படும் பட்சத்தில் விதிமுறைப்படி மீண்டும் ஜெய்ஸ்வால் பேட்டிங் செய்ய முடியும். அவரை தொடர்ந்து வந்த ரஜப் படிதார் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் அரை சதமடித்து 65* ரன்களும் குல்தீப் யாதவ் 3* ரன்களும் எடுத்துள்ளனர். அதனால் 3வது நாள் முடிவில் 196/2 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் இப்போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 90% பிரகாசமாகியுள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement