இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற வருகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. குறிப்பாக ஜெய்ஸ்வால் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்ததால் 33/3 என இந்தியா தடுமாறியது.
ஆனால் அப்போது சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து 132, ரவீந்திர ஜடேஜா சொந்த ஊரில் சதமடித்து 112, சர்பராஸ் கான் அறிமுகப் போட்டியில் 62 ரன்கள் விளாசி இந்தியாவை மீட்டெடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 88 பந்துகளில் சதமடித்து 153 (151) ரன்கள் விளாசினார்.
அதனால் 224/2 என்ற வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து 400 ரன்கள் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 95 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை எடுத்து அந்த அணியை 319 ரன்களுக்கு சுருட்டி அபார கம்பேக் கொடுத்த இந்திய சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4, குல்தீப் யாதவ் 2, ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 19 ரன்களில் ஜோ ரோட் சுழலில் சிக்கினார்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அடுத்ததாக வந்த சுப்மன் கில் மெதுவாக விளையாடி கை கொடுத்தார். அதை பயன்படுத்தி சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் நல்ல பந்துகளுக்கு மதிப்பு கொடுத்து சுமாரான பந்துகளில் அதிரடியாக விளையாடி 80 பந்துகளில் அரை சதமடித்தார்.
அதே வேகத்தில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 9 பவுண்டரி 5 சிக்சருடன் 122 பந்துகளில் சதமடித்தார். குறிப்பாக 49 ரன்களில் இருந்த போது டாம் ஹார்ட்லிக்கு எதிராக சிக்சர் அடித்து அரை சதத்தை தொட்ட அவர் 96 ரன்களில் இருந்த போது மார்க் வுட்டுக்கு எதிராகப் பவுண்டரியை பறக்க விட்டு சதத்தை தொட்டார். கடந்த போட்டியிலேயே ஜாம்பவான் சேவாக் போல 50, 100, 150, 200 ரன்களை பவுண்டரி அல்லது சிக்ஸரால் தொட்ட அவர் இந்த போட்டியிலும் அதையே செய்து தன்னை பயம் அறியாத இளம் புயலாக நிரூபித்துள்ளார்.
இதையும் படிங்க: இஷான் கிசான், ஸ்ரேயாஸ், சஹர் போன்ற வீரர்களுக்கு கடைசி எச்சரிக்கை.. ஜெய் ஷா வெளியிட்ட அதிரடி கடிதம்
அத்துடன் முதல் 73 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து மெதுவாக விளையாடிய அவர் அடுத்த 49 பந்துகளில் அதிரடியாக 75 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 3வது சதத்தை அடித்தார். அவருடைய அதிரடியால் இந்தியா 172/1 ரன்கள் கடந்து 298 ரன்கள் முன்னிலையாக பெற்றுள்ளது.