இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் வென்று தொடரை சமன் செய்த இந்திய அணி ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக இந்த தொடரில் 22 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் அதிரடியாக 80 (76) ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். அதே வேகத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட எடுக்காத போது தனி ஒருவனாக இங்கிலாந்தை நொறுக்கிய அவர் இரட்டை சதமடித்து 209 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.
பரிதாப சாதனை:
அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 35 ரன்கள் கூட எடுக்காத போது இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்தார். அதைத் தொடர்ந்து ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்ஸ் 10 ரன்னில் அவுட்டான அவர் 2வது இன்னிங்ஸில் 214* ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
ஆனால் அப்படி அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதங்கள் அடித்தும் அவருக்கு இதுவரை ஒரு ஆட்டநாயகன் விருது கூட கிடைக்கவில்லை. கடந்த போட்டியில் அவர் 209 ரன்கள் குவித்தும் கடைசியில் 9 விக்கெட்கள் எடுத்த பும்ரா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். அதே போல இப்போட்டியில் 214* ரன்கள் குவித்தும் கடைசியில் 112 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றதால் பாவம்யா அந்த 22 வயது பையன் என்ற வகையில் இந்திய ரசிகர்கள் அவர் மீது பரிதாபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இதன் வாயிலாக உலகிலேயே அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதங்கள் அடித்தும் ஒரு ஆட்டநாயகன் விருது கூட வெல்லாத முதல் வீரர் என்ற பரிதாபமான சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இருப்பினும் 12 சிக்ஸர்கள் அடித்த அவர் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரமின் உலக சாதனையை சமன் செய்தார்.
இதையும் படிங்க: ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறை.. 21ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்துக்கு அவமான சாதனையை பார்சல் கட்டிய இந்தியா
மேலும் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 20* சிக்சர்கள் அடித்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் (19 சிக்ஸர்கள்) சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். மொத்தத்தில் ஆட்டநாயகன் விருது கிடைக்காவிட்டாலும் இதுவரை 3 போட்டிகளில் 545* ரன்கள் குவித்துள்ள ஜெய்ஸ்வாலுக்கு தொடர் நாயகன் விருதாவது கிடைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.